உள்ளூர் செய்திகள் (District)

மீட்கப்பட்ட நகை, பணத்தை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா காண்பித்த போது எடுத்த படம்.

கத்தி இன்றி, ரத்தம் இன்றி, வலி இல்லாமல் தீர்த்துக்கட்டியதாக 'சைக்கோ' கொள்ளையன் வாக்குமூலம்

Published On 2023-04-26 02:19 GMT   |   Update On 2023-04-26 02:19 GMT
  • கடந்த 2 ஆண்டுகளாக என் கொலை வெறிக்கு பெண்கள் மாட்டவில்லை.
  • என் கையால் சாகும் விதி உள்ளவர்கள் இவர்கள் இருவர் மட்டுமே.

கொலையாளி சக்திவேல், 2 கொலைகளை கத்தி இன்றி, ரத்தம் இன்றி செய்து மாபாதக செயலில் ஈடுபட்டுள்ளார். அவர் போலீசில் கொடுத்தவாக்குமூலம் வருமாறு:-

எனது தந்தை தபால் அதிகாரியாக வேலை பார்த்தார். பெற்றோருக்கு நான் ஒரே மகன். உடன்பிறந்த அக்கா, தங்கை உள்ளனர். எனது பெற்றோர் என்னை விட, எனது சகோதரிகளிடம்தான் அதிக பாசம் காட்டினார்கள். என்னை ஒழுங்காக படிக்க கூட வைக்கவில்லை. நான் தபால் மூலம்தான் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ.வரை படித்தேன். ஆனால் அதில் பாஸ் ஆகவில்லை.

நான் வேறு சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எனது மனைவி பெயர் சந்தியா. பிளஸ்-2 வரை படித்தவர். நான் வீடுகளில் உள் அலங்கார வேலைக்கு போவேன். அதில் பெரிய அளவில் வருமானம் இல்லை. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். அவர்களைக்கூட நல்லமுறையாக படிக்க வைக்க வருமானம் இல்லை.

இதனால் எனது மனைவி வேலைக்கு போய் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பாதித்தாள். அந்த வருமானம் சாப்பாட்டு செலவுக்குதான் வரும். வீட்டு வாடகை மாதம் ரூ.7 ஆயிரம் கொடுக்க வேண்டும். அது கொடுக்க முடியாமல் வீட்டு உரிமையாளருக்கு ரூ.70 ஆயிரம் பாக்கி. மாமியார்மற்றும் மனைவியின் தங்கை என்று எல்லோரிடமும் கடன். மனைவியின் நகை அடமானம்.

இந்த நிலையில் எனது பெற்றோரும் எனக்கு துரோகம் செய்தனர். எங்கள் பூர்வீக வீட்டை பல லட்சங்களுக்கு எனது தந்தை விற்றார். அந்த பணம் முழுவதையும், எனது சகோதரிகளுக்கு கொடுத்து விட்டார். எனக்கு அதில் உள்ள பங்கை தர மறுத்து விட்டார். அந்த பணம் கிடைத்திருந்தால், நான் இதுபோல் கொலையாளி ஆகி இருக்க மாட்டேன்.

கடன் மேல் கடன். குடும்பம் நடத்த முடியவில்லை. இதனால் கொலை செய்து, கொள்ளையடித்தாவது, பணம் சம்பாதித்து, கடனை அடைத்து விட்டு, நிம்மதியாக வாழ முடிவு செய்தேன். போலீசில் மாட்டாமல் எப்படி, இந்த கொலை, கொள்ளையில் ஈடுபடுவது என்று யோசித்தேன். அப்போதுதான் எங்கள் வீட்டு அருகில் தனியாக வாழ்ந்த சீதாலட்சுமி என் கண்ணுக்கு நேர் எதிரில் வந்தார்.

அவரை வலி இல்லாமல் கொலை செய்து, கொள்ளையடிக்க திட்டமிட்டேன். பகலில் ஆள் நடமாட்டம் இல்லாதபோது, திறந்து கிடந்த வீட்டில் புகுந்து அவரை தீர்த்துக்கட்டினேன். வீட்டில் பெரிய அளவில் நகை கிடைக்கவில்லை. 19 பவுன் நகைகள் மட்டும் அங்கு கிடைத்தது. அதை சவுகார்பேட்டையில் விற்றேன். அது போதுமானதாக இல்லை. கடனை அடைக்க முடியவில்லை.

இந்த வழக்கில் போலீசில் மாட்டவில்லை. அப்போது நான் வசித்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தவில்லை. அடுத்து தனியாக வசிக்கும் பெண்ணை பல இடங்களில் தேடினேன். என் கடனை அடைக்க உயிரை விடப்போகும், புண்ணியவதி எங்கே இருக்கிறாள், என்று தேடினேன், தேடினேன், தேடிக்கொண்டே இருந்தேன்.

கடந்த 2 ஆண்டுகளாக என் கொலை வெறிக்கு பெண்கள் மாட்டவில்லை. இந்த நிலையில்தான் கடந்த 17-ந்தேதி அன்று, ஆதம்பாக்கம் தில்லை கங்காநகர் 10-வது தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு உள் அலங்கார வேலை செய்யும் வாய்ப்பு வந்தது. அங்கு போனபோது, 10-வது தெருவுக்கு பதில், 12-வது தெருவுக்கு போய் விட்டேன்.

அங்குதான் சிவகாமிசுந்தரியை பார்த்தேன். அவரிடம் முதலில் முகவரி விசாரித்தேன். அவர் முகவரியை சொன்னார். பின்னர் குடிக்க தண்ணீர் கேட்டேன். அவர், தான் வீட்டில் தனியாக இருப்பதாகவும், மகனும், மருமகளும் வேலைக்கு போய் விட்டார்கள் என்றும், மாலை 6 மணிக்கு மேல்தான் வீட்டுக்கு வருவார்கள், என்றும், இதனால் தன்னால் முதல் மாடியில் இருந்து தண்ணீர் கொண்டு தர இயலாது என்றும் தனது வீட்டு அத்தனை சரித்திரத்தையும் சொல்லி விட்டார்.

சிவகாமிசுந்தரிதான் எனது கடனை அடைக்க பலியாகப்போகும் அடுத்த பெண்மணி என்பதை முடிவு செய்தேன். 4 நாட்கள் தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்று நோட்டமிட்டேன். வேலைக்கார பெண் ராஜேஸ்வரி பகல் 11 மணிக்கு வருவார். அவர் வரும்போது மட்டும், சிவகாமிசுந்தரி வீட்டு கதவை திறப்பார். வேலைக்கார பெண் போனபிறகுதான் மீண்டும் கதவை பூட்டுவார்.

அவ்வாறு கதவு திறந்து கிடக்கும்போது, பக்கவாட்டில் உள்ள படிக்கட்டு வழியாக நான் மாடிக்கு போய் ஒளிந்து கொண்டேன். வேலைக்கார பெண் 1 மணி அளவில் போய் விட்டார். உடனே கதவை பூட்டி விட்டு, சிவகாமிசுந்தரி வீட்டுக்குள் வந்தார்.

என்னை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நீ ஏன் வீட்டுக்குள் இருக்கிறாய், என்று சத்தம் போட்டார். உடனே அவரை படுக்கையில் தள்ளி மூச்சு திணற வைத்து தீர்த்து கட்டினேன். வீட்டில் நகைகள், பணம் போன்றவற்றை பீரோக்களை திறந்து அள்ளினேன். அதற்குள் மாலை ஆகிவிட்டது. நைசாக கதவை திறந்து வெளியில் வந்து ஒரு ஆட்டோ பிடித்து தப்பிச்சென்றேன். இந்த முறை கடவுள் என்னை தப்பவிடவில்லை. என் கையால் சாகும் விதி உள்ளவர்கள் இவர்கள் இருவர் மட்டுமே. அதனால் நான் மாட்டி ஜெயிலுக்கு போகிறேன்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

தூக்க நிலையில் முதல் பெண் கொலை... மயக்க நிலையில் 2-வது பெண் கொலை

சென்னையில் சக்திவேல் என்ற 'சைக்கோ' கொள்ளையன் சீதாலட்சுமி என்ற பெண்ணையும், சிவகாமிசுந்தரி என்ற பெண்ணையும் கொன்று நகைகளை கொள்ளை அடித்துள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்கள் இருவரும் 80 வயதை தொட்டவர்கள். அவர்களை வலி இல்லாமல், மூக்கு, வாயை பொத்தி, மூச்சு திணற வைத்து தீர்த்துக்கட்டி இருக்கிறார்.

முதலில் கொலை செய்யப்பட்டவர் சீதாலட்சுமி. இவர் பகலில் கதவை திறந்து போட்டு தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது கொலையாளி சக்திவேல், வீட்டுக்குள் புகுந்து, சீதாலட்சுமியின் மூக்கு, வாயை பொத்தி 10 நிமிடத்தில் உயிரைவிட வைத்துள்ளார்.

அதாவது சீதாலட்சுமியை தூக்க நிலையில், போட்டு தள்ளி இருக்கிறார். 2-வதாக நடந்த சிவகாமிசுந்தரி கொலை மயக்க நிலையில் நடந்துள்ளது. அவரை மூக்கு, வாயை பொத்தி முதலில் மயக்கமடைய வைத்துள்ளார். பின்னர் தலையணையால் முகத்தை அமுக்கி உயிர் போகவைத்துள்ளார். அவர்கள் உயிருக்கு போராடிய நிலையை கண்ணால் பார்த்தால், இரக்கம் வந்து விடும், என்பதால், அதை பார்க்காமல் அவர்களின் முகத்தை மட்டுமே பார்த்தபடி கொன்றதாக கொலையாளி சக்திவேல் தனது வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News