உள்ளூர் செய்திகள்
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: சிறப்பு கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணிப்பு
- இன்று 3- வது முறையாக சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
- கூட்டத்தை புறக்கணித்ததால் தீர்மானம் எதுவும் நிறைவேற்ற முடியாமல் போனது.
சென்னை:
சென்னையை அடுத்து பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி மற்றும் அக்டோபர் 2-ந்தேதி நடந்த கிராம சபை கூட்டத்தை ஏகனாபுரம் கிராம மக்கள் புறக்கணித்தனர். இதையடுத்து இன்று 3- வது முறையாக சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதற்காக அந்த ஊர் முழுவதும் நோட்டீசுகள் வழங்கப்பட்டது.
இன்று காலை கிராமசபை கூட்டம் தொடங்கியது. இதில் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆனால் கிராம மக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்ததால் தீர்மானம் எதுவும் நிறைவேற்ற முடியாமல் போனது.