உள்ளூர் செய்திகள்

ஆபத்தான விளம்பர பேனர்கள் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்-கலெக்டர் தகவல்

Published On 2023-06-06 08:56 GMT   |   Update On 2023-06-06 08:56 GMT
  • அரசு அனுமதியின்றி விளம்பர பலகைகள், விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது.
  • அச்சிடப்படும் அச்சகத்தின் பதிவு எண் மற்றும் செல்போன் எண் இடம் பெற வேண்டும்.

கிருஷ்ணகிரி,

ஆபத்தான விளம்பர பதாகைகள் தொடர்பாக பொது மக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டு இடங்களான பஸ் நிலையங்கள், ஊரக, மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், முக்கிய வளைவுகள், பஸ் நிறுத்தங்கள், தனியாருக்கு சொந்தமான இடங்கள் ஆகியவற்றில் அரசு அனுமதியின்றி விளம்பர பலகைகள், விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது.

விளம்பர பதாகைகள் வைப்பது தொடர்பாக அரசாணை எண்.45 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தெரிவித்துள்ளபடி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்ற பின்னரே விளம்பர பதாகைகள் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தனியாருக்கு சொந்தமான இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளரிடம் சம்மத கடிதம் பெறப்பட்டிருக்க வேண்டும்.

உரிய அனுமதி பெற்றபின் வைக்கப்படும் விளம்பர பதாகைகளில் வழங்கப்பட்ட அனுமதி ஆணை மற்றும் அனுமதிக்கப்பட்ட காலம் மற்றும் அச்சிடப்படும் அச்சகத்தின் பதிவு எண் மற்றும் செல்போன் எண் இடம் பெற வேண்டும்.

மேலும், கோவில், மசூதி, தேவாலயம் போன்ற மக்கள் வழிப்படும் இடங்கள், வரலாற்று புராதனச் சின்னங்கள், நீர்நிலைகள் அமைத்துள்ள பகுதிகளில் விளம்பர பதாகைகள் வைக்க அனுமதி கிடையாது. அரசாணை எண்.45 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை மீறி வைக்கப்படும் விளம்பர பதாகைகள் வைக்கும் நபர்கள் மீது காவல்துறை மற்றம் உள்ளாட்சி மூலம் உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், ஆபத்தான விளம்பர பதாகைகள் தொடர்பாக பொதுமக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News