பாளை தியாகராஜநகரில் சீரான குடிநீர் வழங்க வேண்டும் மேயரிடம் பொதுமக்கள் மனு
- வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
- சந்திப்பு பஸ்நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
சீரான குடிநீர்
துணைமேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாளை தியாகராஜநகர் 55-வது வார்டு பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்களது வார்டுக்குட்பட்ட 5-வது தெற்கு தெருவில் குடிநீர் வழங்கக்கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மனு கொடுத்தோம். இதனைத்தொடர்ந்து 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை தண்ணீர் வழங்கப்பட வில்லை. எனவே சீரான குடிநீர் வழங்க நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
பஸ்நிலையம்
மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் நிஜாம், பொருளாளர் வக்கீல் மன்சூல்அலி, நிர்வாகிகள் மூசா, பேசர்அலி, முருகேசன், சம்சூதீன் உள்ளிட்டோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் நெல்லை சந்திப்பு பஸ்நிலைய பகுதிகள் இன்னும் முடிவடையாதது ஏன்? எதற்காக காலம் தாழ்த்தப்படுகிறது.
பொதுமக்கள் பயணிகளின் நலன் கருதி உடனடியாக சந்திப்பு பஸ்நிலையத்தை திறக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. முன்னதாக அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.