உள்ளூர் செய்திகள்

குண்டும் குழியுமாக கிடக்கும் சாலை.

வருசநாடு அருகே சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் தவிப்பு ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத நிலை

Published On 2022-10-29 04:23 GMT   |   Update On 2022-10-29 04:23 GMT
  • தும்மக்குண்டு வழியாக வாலிப்பாறை சாலை தற்போது குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
  • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வருசநாடு:

வருசநாடு கிராமத்தில் இருந்து முருக்கோடை, தும்மக்குண்டு வழியாக வாலிப்பாறை வரை தார்சாலை சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தார்சாலை அமைக்க அரசு அனுமதி வழங்கி அதற்கான நிதி ஒதுக்கீடு செய்தது.

இதனையடுத்து புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. முதற்கட்டமாக பழைய தார்சாலை அகற்றப்பட்டு மெட்டல் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கும் பணிகளுக்கு வருசநாடு வனத்துறையினர் தடை விதித்தனர்.

சாலை அமைக்கும் பகுதிகளில் குறிப்பிட்ட அளவு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்தனர். இது தொடர்பாக மாவட்ட அதிகாரிகள் வனத்துறையினருடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதனையடுத்து பிரச்சினைக்குரிய பகுதியை தவிர்த்து மற்ற பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தது.

எனவே சாலை அமைக்கப்படாத பகுதிகள் தற்போது குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருகிறது. மேலும் சேதம் அடைந்த சாலை காரணமாக வாலிப்பாறை பகுதிக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுவதில்லை.

எனவே அவசர சிகிச்சை தேவைப்படுபவர்களை ஆட்டோ மூலம் வருசநாடு வரை அழைத்து வந்து அதன் பின்பு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

அடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் சாலை அதிக அளவில் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக மாறும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News