உள்ளூர் செய்திகள் (District)

தாய்-மகன் கொலை வழக்கில் 2 பேர் கைது

Published On 2023-05-03 07:41 GMT   |   Update On 2023-05-03 07:41 GMT
  • நகை, பணத்திற்காக கொலை செய்ததாக வாக்குமூலம்
  • புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்

பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி மாப்படைச்சான் ஊரணி வீதியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 54), கட்டிட பொறியாளர். இவருக்கு கரூரில் ஆசிரியையாக பணிபுரியும் உஷா என்ற மனைவியும், ஸ்ரீராம் என்ற மகனும் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி அன்று இரவு பழனியப்பன் பூர்வீக வீட்டில் வசிக்கும் அவரது தாயார் சிகப்பிக்கு (75) உணவு வழங்க சென்றார். அப்போது பழனியப்பன் மற்றும் சிகப்பி இருவரும் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.இதுகுறித்து பொன்னமராவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில், 5 தனிப்படைகள் அமைத்து வேந்தன்பட்டி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.இந்தநிலையில் பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் தனபாலன் மற்றும் போலீசார் இடையபுதூர் பஸ் ஸ்டாப் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா கள்ளங்காலப்பட்டியை சேர்ந்த சின்னையா மகன் சக்திவேல் (33), தேவகோட்டை தாலுகா உருவாட்டி மாவிலிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சுந்தரம் மகன் அலெக்ஸ் என்கிற அலெக்சாண்டர் (36) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினார்.விசாரணையில், வேந்தன்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் மற்றும் அவரது தாய் சிகப்பி ஆகியோரை பணத்திற்காகவும், நகைக்காகவும் திட்டம் தீட்டி கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கட்டை, கையுறை ஆகியவைகளும் கைப்பற்றப்பட்டது.இதையடுத்து கொலையாளிகள் 2 பேரையும் போலீசார் பொன்னமராவதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை அதிகாரிகள் மற்றும் போலீசாரை நேரடியாக வரவழைத்து போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார். கொலை குற்றவாளிகளை கண்டுபிடித்த காவல்துறைக்கு வேந்தன்பட்டி பொதுமக்கள் நன்றி கூறினர்.

Tags:    

Similar News