பணியின்போது மாடு முட்டி உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு 9.75 லட்சம் நிதியுதவி
- பணியின்போது மாடு முட்டி உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு 9.75 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது
- காவலர் நவநீதகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணியில் இருந்த போது எதிர்பாராத விதமாக மாடு முட்டி உயிரிழந்தார்.
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்என்புரம் பகுதியைச் சேர்ந்தவர் காவலர் நவநீதகிருஷ்ணன், இவர் கடந்த மே மாதம் கல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணியில் இருந்த போது எதிர்பாராத விதமாக மாடு முட்டி உயிரிழந்தார். இந்நிலையில் இறந்த நவநீதகிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு உதவிடும் வகையில், 2013-ம் ஆண்டு அவரது பேட்ஜை சேர்ந்த தமிழ்நாடு முழுவதுமுள்ள சகக் காவலர்கள் வாட்ஸ்ஆப் குழு மூலம் 9 லட்சத்து 75 ஆயிரம் நிதி திரட்டியுள்ளனர். திரட்டிய நிதியை நவநீதகிருஷ்ணனின் மகன்கள் மிதுன்சக்கரவர்த்தி,கீர்த்திவாசன் ஆகிய இருவர் பெயரிலும் தலா நான்கு லட்சத்து 75 ஆயிரம் தொகையை தபால் நிலையத்தில் செலுத்தி அதற்கான வங்கி புத்தகத்தையும், மீதமுள்ள ரொக்கப் பணத்தையும் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். மாடு முட்டி உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு சகக்காவலர்கள் 9 லட்சத்து 75 ஆயிரம் நிதியளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.