மீன்பிடித்தடைக்காலம் தொடங்கியுள்ளதால் பழுதடைந்த படகுகள், மீன்பிடி உபகரணங்களை பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் மும்மரம்
- மீன்பிடித்தடைக்காலம் தொடங்கியுள்ளதால் பழுதடைந்த படகுகள், மீன்பிடி உபகரணங்களை பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்
- தடைக்கால நிவாரணம் 10 ஆயிரம், மானியம் ரூ.2 லட்சம் வழங்க கோரிக்கை
அறந்தாங்கி:
தமிழகத்தில் ஏப்ரல் 14-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரை 61 நாட்கள் மீன் பிடித்தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. கடலில் மீன்வளத்தை பெருக்குவதற்காக அமலில் இருக்கும் இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பழுது பார்த்து தயார் நிலையில் வைத்துக்கொள்வது வழக்கம். புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய துறைமுகங்களிலிருந்து 520-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
இதனை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பெறுகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்களை பொறுத்தவரையில் வாரத்தில் சனி, திங்கள், புதன் ஆகிய கிழமைகளில் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருவதும், வெள்ளிக்கிழமையில் விடுமுறையில் இருப்பதும் வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு புதுக்கோட்டை விசைப்படகு மீனவர்கள் ஏப்ரல் 14-ந்தேதி தடைக்காலத்திற்கு முன்பே 12-ந்தேதியிலிருந்தே தடைக்காலத்தை அனுசரிக்க தொடங்கினர்.
இந்நிலையில் மீன்பிடித்தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வேண்டிய கோரிக்கைகள் குறித்து கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவ சங்கத் தலைவர் அசன் மொகைதீன் கூறியதாவது:- ஆண்டு முழுவதும் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்தாலும் அது வரவுக்கும், செலவுக்கும் சரியாக உள்ளது. இந்த வேளையில் 2 மாதகாலம் தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. மீன்வளத்தை பெருக்குவதற்காக கடைபிடிக்கப்படுகின்ற தடைக்காலம் வரவேற்கதக்கதாக இருந்தாலும், மீனவர்கள் வேறு வேலையின்றி வாழ்வாதாரத்திற்கு திண்டாடும் சூழ்நிலை உருவாகுகிறது.
எனவே தமிழக அரசால் வழங்கக்கூடிய தடைக்கால நிவாரண நிதி ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் தடைக்காலத்தில் 60 நாட்களுக்கும் மேலாக படகுகள் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்படுவதால், படகின் என்ஜின்கள் ஓட்டப்படாமல் பழுதடைந்து விடுகிறது. இதனை சரி செய்வதற்கும், படகின் பழுதடைந்த பாகங்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சரி செய்வதற்கும் அரசு மானியமாக ரூ.1 முதல் ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்க வேண்டும்.அதனை தடைக்காலத்திற்கு பிறகு மீனவர்கள் சிறுக சிறுக அடைத்து விடுவார்கள் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், நாட்டின் அன்னியச் செலாவணிக்கு மீனவர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு மானியம் டீசல் ரூ.80-க்கு மேல் வழங்கப்படுகிறது. இந்த விலை மீனவர்களுக்கு கட்டுபடி ஆகாததால், டீசல் அதன் கொள்முதல் விலைக்கே வழங்கினால் பேருதவியாக இருக்கும். மேலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீன் பிடித்துறைமுகங்கள் தலா ரூ.15 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படும் அறிவித்திருந்தார். ஆனால் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. துறைமுக விரிவாக்கப் பணிகளை விரைந்து தொடங்கினால் மீனவர்கள் வாழ்வாதாரம் மேம்படும் என்று தெரிவித்தார்.