ஆலங்குடியில் சித்தி விநாயகர் கோவில் தேர் வெள்ளோட்டம்
- ஆலங்குடியில் சித்தி விநாயகர் கோவில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது
- அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெம்மக்கோட்டையில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்தி விநாயகர், பொற்பனை முனீஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், ராகு கால துர்க்கை அம்மன் மற்றும் நவக்கிரக தெய்வங்கள் அருள் பாலித்து வருகின்றன.இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஆண்டு வைரத்தேர் செய்யும் பணியில் கோவில் நிர்வாகமும், ஊர் பொதுமக்களும் இணைந்து முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் 27 அடி உயர வைரத்தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவில் நிலையை வந்தடைந்தது. நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் தங்கமணி, ரத்தினவேல் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.