அறந்தாங்கியில் அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க கூடுதலாக பணம் கேட்கப்படுவதாக புகார்
- அறந்தாங்கியில் அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க கூடுதலாக பணம் கேட்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது
- பயனாளிகள் கண்ணீர் மல்க குற்றசாட்டி வருகின்றனர்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குரும்பக்காடு பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. 120 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடங்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வருகிறது. இதில் கஜாபுயலால் பாதிப்படைந்தவர்கள் மற்றும் நகர்புறத்தில் குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அதற்கான ஆவணங்களை வருவாய்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சரிபார்க்கப்பட்டு உரியவர்களுக்கு வீடுகள் வழங்க பரிந்துரைக்கப்பட்டது.
அதனடிப்படையில் கடந்த ஆண்டு 9-வது மாதம் 120 பயனாளிகளிடமிருந்து தலா ரூ.1 லட்சம் காசோலையாக நிர்வாகம் சார்பில் பெறப்பட்டது. இந்நிலையில் வீடுகள் பூர்த்தியாகி பயனாளிகளிடம் ஒப்படைக்கும் தருவாயில் மீண்டும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கட்ட வேண்டும் என நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பயனாளிகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பயனாளிகள் கூறுகையில், ஏழை எளிய மக்களாகிய நாங்கள் வசிக்க வீடு இன்றி அன்றாடம் காய்சியாக வாழ்ந்து வருகிறோம். எதோ அரசின் சார்பில் இலவச வீடு என்றார்கள், அதனை நம்பி வந்தோம். ஆனால் ஒரு லட்சம் பயனாளிகள் கட்ட வேண்டும், மீதி பங்கை அரசு கட்டும் என்று கூறினார்கள், வேறு வழியின்றி இருப்பதை விற்று ரூ.1 லட்சம் பணத்தை கட்டினோம். ஆனால் தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கட்ட சொல்கிறார்கள்.
இருக்க வீடு இன்றி வாழும் எங்களால் இவ்வளவு தொகையினை எப்படி கட்ட முடியும். ஏற்கனவே கட்டிய பணத்திற்கு 8 மாதத்திற்கும் மேலாக வட்டி கட்டிக் கொண்டு வருகிறோம். இந்த நிலையில் இப்படி ஒரு தகவல் பேரிடியாக உள்ளது. எனவே அரசு கவனத்தில் கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு வழிகாட்டிட வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினர். இதற்கிடையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில், ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பரம ஏழைகளுக்கு கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு பெறுவதற்கு ஏற்கனவே ரூ.1 லட்சம் வாங்கப்பட்ட நிலையில் மீண்டும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கேட்பது எந்த வகையில் நியாயம், எனவே ஒன்றிய, மாநில அரசுகள் ஏழைகளுக்கு உதவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.