புதிய மணல் குவாரிகளால் சுற்று சூழல் பாதிப்பு ஏற்படாது-அமைச்சர் மெய்யநாதன் பேட்டி
- புதிய மணல் குவாரிகளால் சுற்று சூழல் பாதிப்பு ஏற்படாது என அமைச்சர் மெய்யநாதன் பேட்டி அளித்தார்
- தமிழகத்தின் உள்கட்ட அமைப்புக்கு மணல் தேவை என்ற கோரிக்கையின் அடிப்படையில் தான் 25 குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழகத்தில் 25 இடங்களில் மணல் குவாரிகளை பொதுப்பணித்துறையே நடத்தும் வகையில் அனுமதி கொடுத்துள்ளோம். எந்தெந்த இடங்களில் எவ்வளவு மணல் எடுக்க வேண்டும் என்று சட்டத்திற்கு உட்பட்டு அனுமதி கொடுத்துள்ளோம். 25 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளால் எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது. தமிழகத்தின் உள்கட்ட அமைப்புக்கு மணல் தேவை என்ற கோரிக்கையின் அடிப்படையில் தான் 25 குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேட்டூரில் மழை பெய்து காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கொள்ளிடம் மூலம் கடலில் காவிரி நீர் கலக்கும் வழித்தடத்தில் அதிக அளவு மணல் திட்டுகள் இருந்ததால் முகத்துவாரங்களில் மழைநீர் கலக்கும் இடங்களில் சிக்கல் ஏற்பட்டது. இவற்றையெல்லாம் சரி செய்தால்தான் தண்ணீர் தடையின்றி கடலுக்கு செல்லும்.அதே வேளையில் மணல் அள்ளும் பணிகளை சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.பெங்களூர் மாநகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுகளால் தான் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் மாசு, அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் பெங்களூரில் 36 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டுமென உத்தரவு விட்டுள்ளது. தமிழக முதல்வர் மற்றும் தலைமைச் செயலர் இது சம்பந்தமாக கர்நாடகா அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முழுமையாக கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு தடுக்கப்படும் பட்சத்தில் தென்பெண்ணை ஆறு முற்றிலும் பாதுகாக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.