விவசாயிகள் கூடுதல் லாபம் பெற திரவ உயிர் உரங்களை பயன்படுத்தலாம்- ேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை
- விவசாயிகள் கூடுதல் லாபம் பெற திரவ உயிர் உரங்களை பயன்படுத்தலாம் என ேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை கூறினார்
- உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து மண்வளம் பாதுகாக்கப்படுவதோடு அதிக மகசூல் கிடைக்கவும் வாய்ப்பளிக்கிறது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வகையான பயிர்கள் விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகள் ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி நஞ்சுள்ள உணவு உற்பத்தியை மட்டும் தான் பெருக்க முடிகிறது.மேலும் சுற்றுப்புற சூழலும் பாதிக்கப்படுகிறது. ஆனால் உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து மண்வளம் பாதுகாக்கப்படுவதோடு அதிக மகசூல் கிடைக்கவும் வாய்ப்பளிக்கிறது.
திரவ உயிர் உரங்கள் பல்வேறு அளவுகளில் பிரத்யேகமான கொள்கலன்களில் விநியோகம் செய்யப்படுகிறது. திரவ உயிர் உரங்களின் ஆயுட்காலம் 12 மாதங்கள் ஆகும்.அகில இந்திய அளவில் தமிழகத்தில்தான் முதன் முறையாக பாக்டீரியவை பிரித்தெடுக்கும் இணை ஒட்ட திரவ வடிப்பான் என்ற தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி உயிர் உரங்கள் தயாரிக்கப்படுகிறது. உயிர் உரங்களை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளுடன் கலந்து உபயோகிக்க கூடாது. உயிர் உரங்களை குறைந்த வெப்பத்தில் நேரடி சூரிய ஒளி படாமல் பாதுகாப்பாக இருப்பு வைக்க வேண்டும்.
விதைகளை பூஞ்சான கொல்லியுடன் விதை நேர்த்தி செய்த பின்தான் கடைசியாக உயிர் உரங்கள் விதை நேர்த்தி செய்ய வேண்டும். எனவே விவசாயிகள் ரசாயன உரங்களை குறைத்து உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்தி சாகுபடி செலவை குறைத்து நிகர லாபம் பெறலாம் என புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.