உள்ளூர் செய்திகள்

உரங்கள் சரக்கு ரெயிலில் வந்தது

Published On 2023-10-19 08:36 GMT   |   Update On 2023-10-19 08:36 GMT
  • புதுக்கோட்டை மாவட்டம் சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள்‌, சரக்கு ரெயிலில்‌ வந்து சேர்ந்தது
  • ரயிலில் இருந்து லாரிகளில் ஏற்றும் பணியினை வேளாண்மை இணை இயக்குநர்‌ ஆய்வு செய்தார்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஏற்கனவே மானாவாரி பகுதியில் மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, தென்னை, கரும்பு மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளன.

இந்த பயிர்களுக்கு தேவையான உரங்களான யூரியா 4598 மெட்ரிக் டன்கள், டி.ஏ.பி. 1596 மெட்ரிக் டன்கள், பொட்டாஷ் 1476 மெட்ரிக் டன்கள், காம்ப்ளக்ஸ் 5667 மெட்ரிக் டன்கள் ஆகியவை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் தனியார் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் மாவட்டத்திற்கு தேவையான உர விநியோகத் திட்ட இலக்கீட்டின்படி உர நிறுவனங்களிலிடமிருந்து உரங்கள் பெறப்படுவதற்கு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களான யூரியா உரம் 785.7 மெட்ரிக் டன்களும், டிஏபி உரம் 252.25 மெட்ரிக் டன்களும், காம்ப்ளக்ஸ் உரம் 249.3 மெட்ரிக் டன்களும், துத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திலிருந்து சரக்கு ரெயில் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்தது.

இந்த உரங்கள், மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளுக்கு விவசாயிகள் பயன்படும் வகையில் அனுப்பி வைக்கப்படுவதை வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி ஆய்வு செய்தார். ஆய்வின்போது புதுக்கோட்டை மாவட்ட தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குநர் மதியழகன், வேளாண்மை அலுவலர் முகமது ரபி மற்றும் ஸ்பிக் உர நிறுவன பிரதிநிதி மயில்வாகனன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும், மாவட்டத்தில் உர விற்பனை மற்றும் உர நகர்வு குறித்து சிறப்பு பறக்கும்படை மூலம் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உர விற்பனையாளர்கள் விதி மீறல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் உரக்கட்டுபாட்டு ஆணை 1985 இன்படியும் மேலும், உர நகர்வு கட்டுப்பாட்டு ஆணை 1973 இன்படியும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

மொத்த உர விற்பனையாளர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் பிற மாவட்டங்களுக்கு உரங்களை அனுப்பிடவும், பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்வதும் கூடாது. உர உரிமத்தில் அனுமதி பெறாத இடங்களில் இருப்பு வைப்பதும், உரங்களை விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டால் உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ன்படி உர உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News