விராலிமலையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்படும் குப்பை கழிவுகள்
- விராலிமலையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குப்பை கழிவுகள் கொட்டப்படுகிறது
- தடுத்து நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்
விராலிமலை,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிலர் குப்பைகளை கொட்டி சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், இதை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி குறிச்சிப்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி பொதுமக்கள் மற்றும் குளம் ஆயக்கட்டுதாரர்கள் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலருக்கு புகார் மனு அளித்துள்ளனர்.
மேலும் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- விராலிமலை அருகே உள்ள வடுகப்பட்டி ஊராட்சி தென்னங்குடி குளம் கரையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடம் காலியாக உள்ளது. அங்கு சிலர் விராலிமலை பகுதியில் இயங்கிவரும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் பல்வேறு நச்சு கழிவுகள், தொழிற்சாலையில் சேரும் குப்பைகளை வாகனம் மூலம் கொண்டு வந்து குளக்கரையில் உள்ள காலியிடத்தில் கொட்டுகின்றனர்.
மேலும் பிளாஸ்டிக், ஆயில் கேன்கள் உள்ளிட்ட பொருட்களும் இக்குப்பை கழிவுடன் கொட்டப்படுவதால் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் புற்களுடன் இக்குப்பைகளை உண்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், குப்பைகளில் இருந்து கிளம்பும் துர்நாற்றத்தால் அப்பகுதி வழியாக பயணிக்கும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவித்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படும் மேலும் சூற்றுச்சூழலை பாதிக்கும் எனவே கோவில் இடத்தை ஆக்கிரமித்து குப்பை கழிவுகளை கொட்டுபவர்களை கண்டறிந்து அவர்களை தடுத்து நிறுத்தி கோயில் இடத்தின் ஆக்கிரமிப்பை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.