உள்ளூர் செய்திகள்

அறந்தாங்கியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

Published On 2023-04-17 05:50 GMT   |   Update On 2023-04-17 05:50 GMT
  • அறந்தாங்கியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
  • அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார்

அறந்தாங்கி:

ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் நோன்பை கடைபிடித்து வருகின்றனர். இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பை கடைபிடிப்பதோடு, இந்த காலகட்டத்தில் பிரார்த்தனைகளை தீவிரப்படுத்துவது, திருக்குர்ஆனை பாராட்டுதல் போன்ற நற்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் அறந்தாங்கி எல்.என்.புரம் தனியார் பள்ளியில் சமூக நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் நோக்கில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு நோன்பை திறந்து வைத்து அவர்களோடு உணவு உண்டு மகிழ்ந்தார்.அப்போது அமைச்சர் பேசுகையில், சிறுபான்மையினருக்கு தமிழக முதல்வர் பாதுகாப்பு அரணாக திகழ்ந்து வருகிறார். தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் பாகுபாடின்றி ஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றோம். இதனால் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர், அறந்தாங்கி நகர் பகுதியை தூய்மையாக வைத்துக்கொள்ள தனியார் அமைப்புகள் புது விதமான முயற்சிகளை மேற்கொண்டு 500 கிலோ பிளாஸ்டிக் போன்ற குப்பைகளை கொண்டு வருவோருக்கு தங்க நாணயம் அறிவித்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இது வரவேற்கதக்கதாகும் என்றும் அதற்கான பணிகளை இன்று முதல் தொடங்கி வைப்பதாகவும் கூறினார். மேலும் அவர்கள் அறிவித்துள்ளது தங்க நாணயம் என்றாலும், குப்பைகளை விற்று அதன் மூலம் வரும் பணத்தையும் நாணயத்தோடு சேர்த்து வழங்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் ஆனந்த், ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், நகர்மன்ற துணை தலைவர் முத்து உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News