எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ்
- எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது
- சமாதான பேச்சு வார்த்தையில் உடன்பாடு
கறம்பக்குடி,
கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள், செவிலியர்கள் நியமனம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை தலைமையில் சாலை மறியல் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆலங்குடி டி.எஸ்.பி. தீபக் ரஜினி, கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன், வருவாய் வட்டாட்சியர் ராமசாமி, வர்த்தக சங்கத் தலைவர் ஜெகநாதன், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது ஜான், தமிழ்நாடு விவசாய சங்க செயலாளர் பொன்னுசாமி சத்தியமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் வீரமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் மருத்துவமனையில் நியமனம் செய்யப்பட்டுள்ள 3 டாக்டர்களில் ஒருவர் மகப்பேறு விடுதியில் இருக்கிறார். மற்ற டாக்டர்களை உடனடியாக பணியில் சேர அறிவுறுத்துவது, மாற்றுப் பணிகளில் கூடுதல் டாக்டர்களை நியமிப்பது, வருகிற 23-ம் தேதி முதல் அரசு மருத்துவமனையை 24 மணி நேரமும் இயங்க செய்வது, மேலும் 2 டாக்டர்களை நியமிக்க கோரி அரசுக்கு கருத்துரு அனுப்புவது, டயாலிசிஸ் எக்ஸ்ரே போன்ற அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை மீண்டும் இயங்க செய்ய நடவடிக்கை எடுப்பது, வாரம் ஒரு முறை மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் ராமு உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டத்தை வாபஸ் பெருவதாக எம்.எல்.ஏ. சின்னத்துரை தெரிவித்துள்ளார்.