அறந்தாங்கி அருகே புதிய பேருந்து நிழற்குடை
- அறந்தாங்கி அருகே புதிய பேருந்து நிழற்குடையை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்
- அமைச்சர் மெய்யநாதன் பள்ளி வளாகம், கழிவறைகள் மற்றும் கட்டிடங்களை பார்வையிட்டார்.
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே காயக்காடு கிராமத்தில் புதிய பேருந்து நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு சுற்றுசுழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்து இனிப்புகளை வழங்கினார். அதனை தொடர்ந்து ஆவணத்தான்கோட்டை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து பள்ளி வளாகம், கழிவறைகள் மற்றும் கட்டிடங்களை பார்வையிட்டார். அப்போது ஆசிரியர்களை பள்ளி வளாகத்தை வீட்டை போல தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் 156 மாணவ மாணவியர்கள் படிக்கின்ற பள்ளியில் போதிய வகுப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளது. அரசு வழங்குகின்ற சலுகைகளை அரசு அதிகாரிகள் செயல்படுத்தாமல் தயக்கம் காட்டக் கூடாது என வட்டார வளர்ச்சி அலுவலரை சாடிய அமைச்சர் கட்டிட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளியில் உங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பீர்களா எனவும் குற்றம் சாட்டினார். எனவே உடனடியாக போதிய கட்டிட வசதிகளுக்கு பரிந்துரைக்க அதிகாரிகளிடம் உத்தரவிட்டார்.
அமைச்சரின் செயலால் பொதுமக்கள் பெற்றோர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், வட்டாட்சியர் பாலக்கிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.