ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க கோரிக்கை
- ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது
- ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் கோரிக்கை விடுத்து தீர்மானம்
பொன்னமராவதி,
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் மேலத்தானியம் முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர் கொன்னைப்பட்டி செல்வமணி , பொருளாளர் தேனூர் கிரிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சேரனூர் காமராஜ், முள்ளிப்பட்டி குமார் ஆகியோர் ஊராட்சிகளின் செயல்பாடு, ஊராட்சி செயலர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்ள்,தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஊராட்சி பணியாளர்க்கு ஊதியம் வழங்க முடியாத நிலை மற்றும் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அத்தியாவசிய தேவை செலவினங்கள் மேற்கொள்ள புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள டி.என்.பாஸ் முறையினால் மேற்கொள்ள முடியாத நிலை மற்றும் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டியவைகள் குறித்து விளக்கிப்பேசினார்.
இதனைத்தொடர்ந்து ஊராட்சிகளில் பணியாளர்கள் மற்றும் செலவினங்களுக்கு ஓ.டி.பி. முறை என்ற டி.என்.பாஸ் முறையினை ரத்து செய்து பழைய முறையினை கொண்டு வரவேண்டும். 3 மாதமாக வழங்கப்படாத மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கவேண்டும்.ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி பணியாளர்களை ஊராட்சி தலைவர்களே நியமனம் செய்யவழிவகை செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த கோரிக்கை அடங்கிய மனுவினை கிராம ஊராட்சி ஆணையர் கருணாகரனிடம் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சித்தலைவர்கள் ராமையா, செல்வராஜ்,ராமன்,அர்ச்சுணன்,அழகுமுத்து, ராமசாமி,பழனிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.