உள்ளூர் செய்திகள்

அறந்தாங்கியில் கோவில் திருப்பணிகளை விரைந்து முடிக்ககோரி ஆலய பாதுகாப்பு இயக்கம் உண்ணாவிரதம்

Published On 2022-10-26 07:37 GMT   |   Update On 2022-10-26 07:37 GMT
  • அறந்தாங்கி அருகே எரிச்சி ஸ்ரீமெய்யர் அய்யனார் கோவில் மிகவும் பழமை வாய்ந்த ஆலயமாக கருதப்படுகிறது.
  • கோயில் பழமையானதால், சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே எரிச்சி ஸ்ரீமெய்யர் அய்யனார் கோவில் மிகவும் பழமை வாய்ந்த ஆலயமாக கருதப்படுகிறது. எரிச்சி, சிதம்பரவிடுதி, நற்பவளக்குடி, வடவயல், ஆமாங்குடி, குன்னக்குரும்பி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் வழிபடுகின்ற இக்கோயிலானது, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் கோயில் பழமையானதால், சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றது. இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த சிலர் கோவில் தங்களுக்கு மட்டுமே உரிமையானது என்று கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதனால் கோவில் திருப்பணிகள் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. பகுதி தலைவர் பாண்டித்துரை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ராமமூர்த்தி சிறப்புரையாற்றினார்.

அப்போது மெய்யர் அய்யனார் ஆலயத்தின் திருப்பணிகளை விரைந்து முடித்து அனைத்து மக்களும் வழிபட ஏற்பாடு செய்ய வேண்டும் என போராட்டத்தின் வாயிலாக அறிவுறுத்தப்பட்டது. போராட்டத்தில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News