உள்ளூர் செய்திகள் (District)

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி - திருநல்லூர் யோகேஸ்வரன் முதல் பரிசாக பைக் வென்றார்

Published On 2023-01-08 17:42 GMT   |   Update On 2023-01-08 17:42 GMT
  • தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு என்ற பெருமை பெற்றது.
  • இதில் தஞ்சையைச் சேர்ந்த ராஜ்குமார் காளைக்கு முதல் பரிசாக பைக் வழங்கப்பட்டது.

கந்தர்வகோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் புனித அடைக்கல அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இங்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜனவரி 1-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.

பாதுகாப்பு காரணங்களால் 2-ம் தேதி நடத்தப்பட்ட இந்த போட்டி கடந்த ஆண்டு கொரோனா காரணமாக 13-ம் தேதி நடைபெற்றது.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தயாராக இருந்த நிலையில், பாதுகாப்பு நலன் கருதி ஜல்லிக்கட்டு போட்டி ஒத்தி வைக்கப்படுவதாக கலெக்டர் கவிதாராமு அறிவித்தார்.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை முறையாக மேற்கொள்ளவில்லை, மாடுகள் வெளியே வரக்கூடிய கலெக்ஷன் பாயிண்ட் முறையாக அமைக்கவில்லை, மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு ஆன்லைன் முறையில் முறையாக டோக்கன் வழங்கப்படவில்லை, வீரர்களுக்கான கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. பணிகள் அனைத்தும் முடித்த பிறகு ஜல்லிக்கட்டு குழுவினர் எந்த தேதியில் அனுமதி கேட்கிறார்களோ அந்த தேதியில் அனுமதி வழங்கப்படும் என்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த தச்சங்குறிச்சி கிராம மக்கள், ஜல்லிக்கட்டு விழா குழுவினர் அதிகாரிகளின் வாகனங்கள் முற்றுகை, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து இன்று (8-ம் தேதி) ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் அடிப்படையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக 500 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

அதேபோல் 300 மாடுபிடி வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர். அவர்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. பலருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ் உடனடியாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது.

முன்னதாக புனித அடைக்கல அன்னை ஆலய பங்குத்தந்தை தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேளதாளங்கள், வாணவேடிக்கைகள் முழங்க நேரம் கருதி காலை 6.30 மணிக்கு கோவில் 15 கோவில் காளைகள் அடுத்தடுத்து அவிழ்த்து விடப் பட்டன.

இதையடுத்து காலை 8.30 மணிக்கு அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கலெக்டர் கவிதா ராமு, எம்.எல்.ஏ.க்கள் சின்னதுரை, டாக்டர் முத்துராஜா, வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் ஆகியோர் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

முன்னதாக, மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு விதிமுறைகளை சரியாக கடைபிடிப்பேன், காளைகளை துன்புறுத்த மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் பதிவு செய்யப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

மாடுபிடி வீரர்கள் சுழற்சி முறையில் களத்தில் இறக்கி விடப்பட்டனர். அவர்கள் வாடிவாசலில் இருந்து திமிறியும், சீறிப்பாய்ந்தும் துள்ளிக்குதித்து வந்த காளைகளை திமிலை பிடித்து அடக்கினர். இதில் பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டி களத்தில் நின்று விளையாடியது.

அந்த காளைகளுக்கும், அதேபோல் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் மோட்டார் சைக்கிள், சைக்கிள்கள், கட்டில், பீரோ, சேர், அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் தஞ்சையைச் சேர்ந்த ராஜ்குமார் காளைக்கும், திருநல்லூரை சேர்ந்த யோகேஸ்வரன் என்ற வீரருக்கும் முதல் பரிசாக பைக் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு என்ற பெருமை பெற்றதையடுத்து போட்டியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், இளைஞர்கள் ஏராளமானோர் திரண்டனர். அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் அருகே தயார் நிலையில் ஆம்புலன்சு, தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் துரத்தியதிலும், தூக்கி வீசியதிலும் பெண் காவலர் உள்பட 70 பேர் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 4 பேர் உடனடியாக ஆம்புலன்சு மூலம் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

Tags:    

Similar News