உள்ளூர் செய்திகள்

கறம்பக்குடி மருத்துவமனைக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும்

Published On 2023-09-30 06:38 GMT   |   Update On 2023-09-30 06:38 GMT
  • எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.
  • காத்திருப்பு போராட்டமும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

கறம்பக்குடி, 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. அதன்பிறகு பல்வேறு தரப்பு மக்களின் வேண்டுகோளை ஏற்று கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.

ஆனால் பெயரளவிற்கே அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. போதிய மருத்துவர்கள் செவிலியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனை கண்டித்து பல போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் கே. கே. செல்லபாண்டியன் மற்றும் கறம்பக்குடி பேரூராட்சி தலைவர் முருகேசன் ஆகியோர் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியனை சந்தித்து கறம்பக்குடி அரசு மருத்துவமனையின் தற்போதைய நிலையைப் பற்றி எடுத்து கூறினார்.

தாலுக்கா மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியான பிறகு, அந்த நடைமுறைகள் செயல்படுத்த மூன்று மாத காலமாகும் அதன் பின்னரே தாலுக்கா மருத்துவமனைக்கு தேவையான டாக்டர்கள் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் முருகேசன் மருத்துவமனை மீட்பு குழுவினர் மற்றும் வர்த்தக சங்கம் வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகளிடம் இதனை தெரிவித்தார். இந்நிலையில் மருத்துவமனை மீட்பு குழுவினர் மற்றும் வர்த்தக வியாபாரிகள் சங்கத்தினர் திட்டமிட்டபடி வரும் 3-ந்தேதி மருத்துவமனையில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர கோரி கடையடைப்பு போராட்டமும் காத்திருப்பு போராட்டமும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News