உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்
- உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
- தமிழகத்தில் சுகாதாரத்துறை செயல்படவில்லை
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
இதில் தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான், பாசறை கருப்பையா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் டாக்டர் விஜய் பாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது ;-
வருகிற நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது. உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை என்பது நல்ல விஷயம் என்றாலும் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத்துறை செயல்படாமல் திறனற்ற துறையாக, தலை இல்லாத துறையாக உள்ளது. இதனால் மக்களும், நோயாளிகளும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
எம்.ஆர்.பி. செவிலியர்கள் தொடர்ந்து சென்னையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த செவிலியர்களுக்கு பணி கொடுக்க இந்த அரசுக்கு மனமில்லை 2 1/2 ஆண்டுகளில் மருத்துவர் உள்ளிட்ட எந்தவித மருத்துவ பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 2-வது பல் மருத்துவ கல்லூரியினை புதுக்கோட்டையில் தொடங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தால் 2 1/2 ஆண்டு காலம் முடிந்த பிறகும் இதுவரை பல் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு தாமதம் செய்து வருகிறார்கள். தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட்டால் மட்டுமே டெங்குவை ஒழிக்க முடியும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இனியாவது அரசு விழித்துக் கொண்டு டெங்கு ஒழிப்பு பணிகளை முடுக்கி விட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.