ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் சாலையின் இருபுறமும் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
- காந்திபுரம், ஒண்டிபுதூர், டவுன்ஹால் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இந்த சாலை வழியாக தான் செல்கிறது.
- வாடிக்கையாளர்கள் காரை சாலையோரம் நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்க செல்கிறார்கள்.
குனியமுத்தூர்,
கோவையில் ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும். காந்திபுரம், ஒண்டிபுதூர், டவுன்ஹால் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இந்த சாலை வழியாக தான் செல்கிறது.
இதுதவிர இந்த பகுதியில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அதிகளவில் உள்ளன. இதன் காரணமாக பொருட்கள் வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதிக்கு வருகின்றனர். இதனால் எப்போதும் இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் இந்த சாலையின் வலது புறமும், இடது புறமும் 4 சக்கர வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-
இந்த சாலையில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்கள் காரை சாலையோரம் நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்க செல்கிறார்கள்.
அவர்கள் வரும் வரை அந்த கார் அங்கேயே நிற்கும். இதனால் மாலை நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையின் ஒரு புறத்தில் மட்டும் தான் வாகனங்களை பார்க்கிங் செய்ய வேண்டும் என போக்குவரத்து போலீசார் கூறினர். விதிமுறை விதித்துள்ளனர். அனைவருமே அதனை கடைபிடித்து வந்தனர். ஒரு மாதம் வலது புறமும், மற்றொரு மாதம் இடது புறமும் நிறுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினர்.
அதன்படி அனைவரும் தங்கள் வாகனங்களை நிறுத்தி வந்தனர். ஆனால் தற்போது போலீசார் எதையும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.இதனால் பகுதிக்கு 4 சக்கர வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களில் வருபவர்கள் சாலையின் இரு புறங்களிலும் தங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் பல நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதற்கு முன்பு போலீசார் வந்து வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். ஆனால் தற்போது கண்டுகொள்வதில்லை. இதனால் அனைத்து வாகன உரிமையாளர்களும் அவர்கள் இஷ்டத்திற்கு வாகனத்தை விட்டு செல்கிறார்கள்.
எனவே வாகனங்களை வரைமுறைப்படுத்தி நிறுத்தினால் மட்டுமே இந்த போக்குவரத்து நெருக்கடிக்கு ஒரு தீர்வு காண முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.