சென்னையில் மழை பாதிப்பு கடந்த ஆண்டு நிலையே நீடிக்கிறது-எச்.ராஜா குற்றச்சாட்டு
- கால்வாய்களை முறையாக தூர்வாராததால் மழைநீர் சூழ்ந்தது.
- மழைநீர் வடிகால்களை அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஊட்டி:
தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
சென்னையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையின் போது மழைநீர் வடிகால் கால்வாய்களை முறையாக தூர்வாராததால் மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
அப்போது தமிழக அரசு மழை நீர் வடிகால்களை அமைக்க ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு 90 சதவீத பணி முடிந்ததாக கூறியது. அதன்பின்னர் 40 சதவீத பணிகள் முடிந்ததாக கூறினர்.
தற்போது சென்னையில் மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட அதே நிலைமை தான் தற்போதும் அங்கு ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு மெத்தனபோக்கு காட்டாமல், மக்களின் நலனை கருத்தில் கொண்டு மழைநீர் வடிகால்களை அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஏனென்றால் சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்தாண்டு இதேபோன்று உத்தரபிரதேசத்தில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் அங்கு இதுபோன்ற எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.
மத்திய அரசுக்கு எதிராக தவறான கருத்துக்களை கூறினால் தான் மக்கள் துணை முதல்வர் என ஏற்றுக்கொள்வார்கள் என உதயநிதி ஸ்டாலின் நினைக்கிறார்.
சென்னை கவரப்பேட்டையில் நடைபெற்ற ரெயில் விபத்தில் மனித தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறா என விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் சதி வேலைகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.
துணை முதல்வராக பொறுப்பேற்ற பின்பு உதயநிதி, மத்திய ரெயில்வே மந்திரி பற்றியும், அவர் மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு தான் கூடுதலாக ரெயில் விபத்துக்கள் நடப்பது மாதிரியும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது மாதிரியும் பேசுகிறார்.
அவர் அரசியலை பற்றி தெரியாமல் ஒரு விளையாட்டு மந்திரியாக, விளையாட்டுத் தனமாக, அரசியல் அனுபவமின்றி பேசி வருகிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.