ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக கனமழை
- அருவிகளுக்கும், வனப்பகுதிகளுக்கும் செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
- கோடையில் வறண்டு காணப்பட்ட நீர்நிலைகள் வெகுவேகமாக நிரம்பி வருகின்றன.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நீரோடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
கடந்த மாதத்தில் வெளுத்து வாங்கிய கோடை வெயில் காரணமாக குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டன. தற்போது கோடை விடுமுறை என்பதால் அவற்றை பள்ளி மாணவர்களும், கல்லூரி இளைஞர்களும் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர்.
இந்த சூழலில் கத்திரி வெயில் தொடங்கிய ஓரிரு நாட்களில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த சுழற்சி காரணமாக வெப்பநிலை மாறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலமாக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.
இதை தொடர்ந்து கடலோர மாவட்டங்கள் தெற்கே நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து அப்பகுதிகளில் உள்ள காட்டாறுகளிலும், நீரோடைகளிலும் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள அருவிகளுக்கும், வனப்பகுதிகளுக்கும் செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றும் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டிதீர்த்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி, திருவாடானை, தங்கச்சிமடம், மண்டபம், ராமேசுவரம் ஆகிய பகுதிகளில் அதிகனமழை பெய்தது.
இதனால் கோடையில் வறண்டு காணப்பட்ட நீர்நிலைகள் வெகுவேகமாக நிரம்பி வருகின்றன. நீரோடைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கோடையை வாட்டி வதக்கிய வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக தட்ப வெப்பநிலை ஏற்பட்டுள்ளது.
நீர்நிலைகள் நிரம்பி வருவதால் கோடை உழவு பயிரிட்டுள்ள விவசாயிகளும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கமுதி பகுதியில் கோடைகாலம் தொடங்கிய நாள் முதல் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. கமுதி வட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடுகள் ஏற்பட்டது. இதனால் தினந்தோறும் கிராமங்களில் பெண்கள், ஆண்கள், முதியோர்கள் அனைவரும் தள்ளு வண்டியுடன் வெகு தொலைவு சென்று தண்ணீர் எடுக்கும் சூழ்நிலை இருந்து வந்தநிலையில் திடீரென பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடந்த சில நாட்களாக கமுதி அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. தொண்டி, திருவாடானை, தங்கச்சிமடம், மண்டபம், ராமேசுவரம், கமுதி, கோட்டைமேடு, பசும்பொன், அபிராமம், கோவிலாங்குளம், புதுக்கோட்டை, மண்டலமாணிக்கம், பெருநாழி, கிழராமநதி ஆகிய பகுதியில் தினந்தோறும் மழை பெய்து வருகிறது.
ராமேசுவரம்,பாம்பன், தங்கச்சிமடம், உள்ளிட்ட பகுதியில் பரவலாக மழை பெய்தது. மேலும் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்ததால் குளுமையான சூழல் காணப்பட்டது. நேற்று பெய்த மழையால் தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதியில் மழைநீர் குளம் போல தேங்கியது. இந்த பகுதியில் மழை பெய்தால் மழைநீர் தேங்கி விடுவதாகவும் 500 மீட்டர் வரை சாலையை உயர்த்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்தநிலையில் இன்று மழையின்றி மிதமான வெயில் காணப்பட்டது.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்று பரவலாக பெய்த மழையின் அளவு (மி.மீ) பின்வருமாறு:-
தொண்டி-96.40, தீர்தண்டதானம்-78.40, வட்டானம்-64.80, திருவாடானை-44.00, தங்கச்சிமடம்-22.00, மண்டபம்-20.60, ராமேசுவரம்-19.00, பாம்பன்-15.20, கமுதி-11.40, கடலாடி-9.40, ஆர்.எஸ்.மங்கலம்-3.00, ராமநாதபுரம்-2.00, பரமக்குடி-1.50, பல்லமோர்குளம்-1.50.