ரூ.3.83 கோடியில் நடைபெறும் வளர்ச்சி பணிகள்
- ரூ.3.83 கோடியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் தேரிருவேலி ஊராட்சியில் அனைத்து கிராம மேம்பாட்டு திட்டத்தில் காகித மில்லத் வீதியில் ரூ.4.20 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். ராவுத்தர் சாகிப் மேல்நிலைப் பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஊராட்சியின் மூலம் நன்றாக பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2 பயனாளி களுக்கு தலா ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வருவதை கலெக்டர் பார்வையிட்டு உரிய காலத்திற்குள் கட்டி முடிக்க அறிவுரை வழங்கினார்.
தேரிருவேலி பெரிய கண்மாயில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.8.99 லட்சம் மதிப்பீட்டில் கண்மாய்யை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணியாளர்களிடம் இதை நன்றாக சீரமைத்தால் உங்களுக்கு நீண்ட நாள் பயனுள்ளதாக இருக்கும். அதே போல் அரசு வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு பணியாளரும் உரிய அளவீட்டு பணியை நாள் ஒன்றுக்கு சரியாக மேற்கொள்ளும் பொழுது அதிகபட்ச ஊதிய தொகையை எளிதாக பெற முடியும்.
பணியா ளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு முழுமையான ஊதியத்தை பெற வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார். பின்னர் அந்த பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என தெரிவித்தார்.
தேரிருவேலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் பார்வையிட்டு மருத்துவர்களிடம் சிகிச்சை வழங்குவது குறித்தும், நாள்தோறும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும், மருந்துகள் இருப்பு குறித்தும் கேட்டறிந்தார்.
முதுகுளத்தூர் பேரூராட்சியில் பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் நீர்நிலை ஆதாரங்களை மேம்படுத்தும் வகையில் திடல் சிறையத்தேவன் ஊரணியில் ரூ.119.80 லட்சம் மதிப்பீட்டில் சீரமைத்து கரையை பலப்படுத்தி பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு உரிய காலத்திற்குள் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முதுகுளத்தூரில் ரூ.242.85 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை மற்றும் வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகள் நடைபெறும் பொழுது பொறியாளர் ஆய்வு செய்து தரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் ஷாஜகான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜானகி, பிரியதர்ஷினி, பொறியாளர் ஜம்பு முத்து ராமலிங்கம், பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, தேரிருவேலி ஊராட்சி மன்றத்தலைவர் அபுபக்கர் சித்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.