- ராமநாதபுரம் அருகே வேன் கவிழ்ந்து 7 பேர் படுகாயமடைந்தனர்.
- மாடு குறுக்கே வந்ததால் வேடிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
தொண்டி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்
(வயது 65). இவரது சகோதரர் முருகேசன் என்பவர் இறந்து விட்டார். அவரது அஸ்தியை ராமேசுவரம் சேதுக்கரையில் கரைப்பதற்காக ஒரு வேனில் அவரது குடும்பத்தினர்கள் உள்பட 20 பேர் சென்றனர்.
அந்த வேன் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மேல்பனையூர் பாலம் அருகில் சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென மாடு சென்றதால் வேன், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மாட்டின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த 2 சிறுமிகள் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் திருவாடானை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவாடானை தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வேனில் பயணம் செய்த மற்றவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. அவர்களை மீட்டு மற்றொரு வேனில் அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் கீழே விழுந்து காயம் அடைந்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.