உள்ளூர் செய்திகள்

கீழக்கரை நகராட்சியில் சிறைபிடித்த மாடுகள் மாயம்

Published On 2022-10-07 07:36 GMT   |   Update On 2022-10-07 07:36 GMT
  • கீழக்கரை நகராட்சியில் சிறைபிடித்த மாடுகள் மாயமாகின.
  • கண்காணிப்பு காமிரா உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் ஏராளமானோர் பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர். காலையில் பசு மாடுகளில் பால் கறந்த பின்பு அவைகளை வெளியே விடும் உரிமையாளர்கள் பின்னர் அதைப்பற்றி கண்டு கொள்வது கிடையாது.

பகல் நேரங்களில் வெளியில் விடப்படும் இந்த மாடுகள் பஸ் நிலையம், கீழக்கரை சாலைகளில் சுற்றி திரிகின்றன. இரவு நேரங்களில் பஸ் நிலையத்திலேயே தங்கி விடுகின்றன. பஸ் நிலையத்திற்குள் வரும் வாகனங்கள் ஹாரன் அடித்தாலும் ஒதுங்குவது கிடையாது. இதனால் சமீப காலமாக பஸ் டிரைவர்கள் பஸ்களை நிறுத்த முடியாமல் சிரமம் அடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலைகளில் மாடுகள் நடமாட்டம் இருந்தால் கால்நடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் எச்சரித்தார். அது காற்றில் பறந்த உத்தரவாக இருந்து வந்தது.

கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிலையம், சாலைகளில் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர், சமூக நல அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதன் எதிரொலியாக கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹானஸ் ஆபிதா ஆலோசனையின்படி துப்புரவு பணியாளர்கள் சாலையில் திரிந்த மாடுகளை பிடித்து நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அடைத்தனர். அபராதம் செலுத்திய பின் உரிமையாளர்களிடம் மாடுகள் ஒப்படைக்க பட்டன.

அபராதம் செலுத்தாத 28 மாடுகள், ஒரு கன்றை பிடித்து தனியார் நிலத்தை வாடகைக்கு எடுத்து அடைத்தனர். மாடுகளை அடைத்து 10 நாட்கள் ஆகியும் உரிமையாளர்கள் வரவில்லை. நகராட்சி மூலம் மாடுகளுக்கு தீவனங்கள் வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டன.

இந்த நிலையில் நகராட்சி ஊழியர்கள் மாடுகளுக்கு தீவனம் வைக்க சென்றுள்ளனர். அப்போது மாடு அடைக்கப்பட்டு இருந்த கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 28 மாடுகளையும் திருடி சென்றது தெரிய வந்தது.

இதைக்கண்ட நகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து நகர்மன்ற தலைவர் மற்றும் ஆணையாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து நகர் மன்ற தலைவர் செகானாஸ் ஆபிதா கூறுகையில், அடைத்து வைக்கப்பட்டிருந்த மாடுகள் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்துள்ளோம். இது குறித்து போலீசார் இன்று விசாரணை நடத்த உள்ளனர். இங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து மாடுகளை மீட்டு சென்றவர்கள் குறித்து அடையாளம் காணப்படும். சம்பந்தப்பட்ட இடத்தில் பணிபுரியும் காவலர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News