உள்ளூர் செய்திகள் (District)

தாயுடன் மாணவி துர்கா.

பெட்டிக்கடையில் பணியாற்றிய மாணவியை மீண்டும் கல்லூரியில் சேர்த்த ஈமான் அமைப்பினர்

Published On 2022-08-26 08:57 GMT   |   Update On 2022-08-26 08:57 GMT
  • கீழக்கரை அருகே பெட்டிக்கடையில் பணியாற்றிய மாணவியை மீண்டும் கல்லூரியில் ஈமான் அமைப்பினர் சேர்த்தனர்.
  • மாணவியின் சான்றிதழ்களை பெற்று கல்லூரி நிர்வாகத்திடம் பேசினார்.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மாயாகுளம் பகுதியை சேர்ந்தவர் இழுவக்கா. இவரது கணவர் வேலு சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.கடல் பாசி சேகரித்து அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் கடைசி மகள் துர்கா (வயது19) கீழக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக முதலாம் ஆண்டு படிப்புடன் நின்று விட்டார். பின்னர் செய்யது அப்பா தர்கா அருகில் உள்ள பெட்டிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார்.

இந்த நிலையில் துபாயில் உள்ள ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் கீழக்கரை வந்தார். அப்போது பெட்டிக் கடையின் உரிமையாளர் ஜகுபர், ஹமீது யாசினை சந்தித்து கடையில் பணியாற்றும் துர்கா பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று கல்லூரி படிப்பை ஒரு வருடம் படித்துவிட்டு வறுமையின் காரணமாக தொடர்ந்து படிக்க இயலாமல் நிறுத்தி 9 மாதம் ஆகிவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து துபாய் ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் அந்த மாணவியிடம் விசாரித்தார்.

ஈமான் அமைப்பின் மூலம் துர்காவின் கல்வியை மீண்டும் தொடர ஏற்பாடு செய்வதாக உறுதியளித்து அதற்கான நடவடிக்கை எடுத்தார். மாணவியின் சான்றிதழ்களை பெற்று கல்லூரி நிர்வாகத்திடம் பேசினார். இதனைத் தொடர்ந்து கோரிக்கை விடுத்த 3 மணி நேரத்தில் மாணவி துர்கா மீண்டும் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். கல்லூரி படிப்பு நிறைவு செய்யும் வரை முழு செலவையும் ஈமான் தலைவர் ஹபிபுல்லா கான் மற்றும் நிர்வாகிகள் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

மீண்டும் கல்லூரி படிப்பை தொடர உதவிய துபாய் ஈமான் அமைப்பினருக்கு மாணவியின் தாய் மற்றும் மாணவி துர்கா கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News