உள்ளூர் செய்திகள்

பயணிகள் நிழற்குடையை நவாஸ் கனி எம்.பி. திறந்து வைத்தார்.

அமைச்சர் வீடுகளில் வருமான வரி சோதனை

Published On 2023-05-30 06:55 GMT   |   Update On 2023-05-30 06:55 GMT
  • காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தி.மு.க. அமைச்சர் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாக நவாஸ் கனி எம்.பி. குற்றம் சாட்டினார்.
  • பா.ஜ.க. எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இவ்வாறு செயல்பட்டு வருவதாக கூறினார்.

பரமக்குடி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட நெல்மடூர் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ. 7 லட்சம் மதிப்பில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கப் பட்டது. அதனை நவாஸ் கனி எம்.பி. தலைமை தாங்கி திறந்து வைத்தார்.

முன்னதாக நெல்மடூர் ஊராட்சி மன்றத்தலைவி சுகன்யா சதீஷ் சால்வை அணிவித்து வரவேற்று பேசினார். பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

இதைத்தொடர்ந்து நவாஸ்கனி எம்.பி. பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தி.மு.க. அமைச்சரின் வீடுகளில் வரு மான வரித்துறை சோதனை நடந்தது. பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜ.க. எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இவ்வாறு செயல்பட்டு வருகிறது.

கொங்கு மண்டலத்தில் தி.மு.க. வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் தி.மு.கவை எப்படியாவது ஒடுக்கி விடலாம் என நினைத்து இதுபோன்ற செயலை பா.ஜ.க. செய்து வருகிறது. இதற்கெல்லாம் தி.மு.க. வினர் பயப்பட மாட்டோம்.

கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி தி.மு.க.வுக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தேடித்தரும் நபராக இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News