கிராமப்புற சாலைகளில் இருந்து வருவோர் தான் அதிக விபத்துகளை ஏற்படுத்துகின்றனர்: அமைச்சர் எ.வ.வேலு
- கிராமப்புற சாலைகளில் இருந்து வருவோர் தான் அதிக விபத்துகளை ஏற்படுத்துகின்றனர் என அமைச்சர் எ.வ.வேலு சொல்கிறார்.
- தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் கிராமப்புற சாலைகளிலிருந்து வருவோர் தான் அதிக விபத்துகளை ஏற்படுத்துகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் விபத்துகள் மூலம் தினமும் 410 உயிரிழப்புகளும், தமிழகத்தில் 41 உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் கிராமப்புற சாலைகளிலிருந்து வருவோர் தான் அதிக விபத்துகளை ஏற்படுத்துகின்றனர்.
இதைக் கட்டுப்படுத்த வேகத்தடைகள் அமைக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருசக்கர வாகன பயன்பாடு 42 சதவீதமும், 4 சக்கர வாகன பயன்பாடு 17 சதவீதமும், கனரக வாகன பயன்பாடும் 14 சதவீதமும் உள்ளது. இதில் இருசக்கர வாகன விபத்துக்களே அதிகம் நடக்கின்றன.
'நம்மை காக்கும் 48 மணி நேரம்' திட்டத்தில் விபத்து சிகிச்சை அளிக்க 659 தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இதுவரை 83512 விபத்துகளில் தமிழக அரசு ரூ.75.81 கோடி செலவழித்து 83512 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது.
விபத்தை அதிகளவில் குறைத்து முதலிடம் பெறும் மாவட்டத்திற்கு ரூ.25 லட்சமும், 2-ம் இடம் பெறும் மாவட்டத்திற்கு ரூ.13 லட்சமும், 3-ம் இடம் பெறும் மாவட்டத்திற்கு ரூ.10 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலை 4 வழிச்சாலைக்காக மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு
முதல்கட்டமாக சென்னை முதல் பாண்டிச்சேரி வரை பணி நடந்து வருகிறது. 2-ம் கட்டமாக நாகப்பட்டினம் வரை, 3-ம் கட்டமாக ராமநாதபுரம் வரை, 4-ம் கட்டமாக தூத்துக்குடி வரை, 5-ம் கட்டமாக கன்னியாகுமரி வரை சாலை அமைக்கப்பட உள்ளது. தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கார் நிறுத்தம் மற்றும் கழிப்பறை அமைப்பதற்கு இடத்தை ஆய்வு செய்துள்ளேன்.
சாகர் மாலா திட்டத்தின் பாம்பன் பாலத்தின் கீழ் பாம்பன் கால்வாய் 10 மீட்டர் ஆழத்தில் தூர்வார மத்திய அரசிடம் நிதி கோரப்படும்.
தனுஷ்கோடி-தலைமன்னார் கப்பல் போக்குவரத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்துள்ளேன். இதற்காக முதல்வருடன் டெல்லி சென்று மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும். தமிழகத்தில் அதிகமாக உள்ள சுங்கச்சாவடிகளை குறைக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நெடுஞ்சாலைத்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், நவாஸ்கனி எம், பி, , எம்.எல்.ஏ, க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், நெடுஞ்சாலைகள் துறை தலைமைப் பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.