சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
- வருகிற 23-ந் தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா தொடங்கப்பட்டு, 24-ந்தேதி அதிகாலை தர்காவிற்கு சந்தக்கூடு வந்தடையும்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்காவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக ஏர்வாடி தர்கா பொது மகாசபை உறுப்பினர்கள் (ஹக்தார்) நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டுக்கான 848-வது சந்தனக்கூடு திருவிழா கடந்த 1-ந்தேதி மவுலீதுடன் (புகழ்மாலை) தொடங்கியது. நேற்று முன்தினம் தர்கா மண்டபத்திற்கு எதிரே உள்ள கொடிமரம் மேடையில் அடிமரம் ஏற்றப்பட்டது.
நேற்று (11-ந்தேதி) மாலை ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுராகிம் லெவ்வை மகாலில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக தர்காவை வந்தடைந்தது. அலங்கார ரதம் தர்காவில் 3 முறை வலம் வந்த பின்னர் பக்தர்களின் நாரே தக்பீர் முழக்கத்துடன் கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக தர்கா மண்டபத்தில் பக்தர்கள் ஒன்றிணைந்து மவுலீது ஒதினர்.
இதைத் தொடர்ந்து செய்யது பாருக் ஆலிம் மத நல்லிணக்கம் தொடரவும், உலக மக்கள் மகிழ்ச்சியுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்தார். ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின் பேரில் கீழக்கரை துணை போலீஸ் கண்காணிப்பாளர் சுபாஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 23-ந்தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா தொடங்கப்பட்டு 24-ந்தேதி அதிகாலை தர்காவிற்கு சந்தக்கூடு வந்தடையும்.
பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும். 30-ந்தேதி கொடியிறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தலைவர் பாக்கிர் சுல்தான், செயலாளர் சிராஜுதீன், உப தலைவர் சாதிக் பாட்ஷா ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் செய்து வருகின்றனர்.ஏர்வாடி தர்கா ஷரீப் சந்தனக்கூடு விழா சிறப்பாக நடத்துவது தொடர்பாக கலெக்டர் சங்கர்லால் குமாவத், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் ஏர்வாடி தர்கா ஹத்தார் நிர்வாக சபை உறுப்பினர்களுடன் தர்காவில் ஆலோசனை நடத்தினார்.
இதில் ஊராட்சி சார்பில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும், போக்குவரத்து துறை சார்பில் கூடுதலாக உள்ளூர் பஸ்களை இயக்கவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவர்கள் தலைமையில் செவிலியர்கள் அடங்கிய குழு அமைத்து ஆம்புலன்ஸ் வசதியுடன் தயார் நிலையில் இருக்கவும், காவல் துறையினர் தேவையான பாதுகாப்பு பணியில் ஈடுபடவும், பொதுமக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தவும் கலெக்டர், அலுவலர்கள் மற்றும் ஏர்வாடி தர்கா ஹத்தார் நிர்வாக சபை உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.
இதில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர், கீழக்கரை வட்டாட்சியர் சரவணன், கடலாடி ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை உள்ளிட்ட அலுவலர்கள், ஏர்வாடி தர்கா ஹத்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.