போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தும் இருசக்கர வாகனங்கள்
- ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
- போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மத்திய பகுதியில் சிறிய இடத்தில் இயங்கி வரும் பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் பயணிகள் அதிகளவில் வருவதால் காலை, மாலை நேரங்களில் கூட்டம் அதிகளவில் உள்ளது.
அரசு, தனியார் பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. போக்குவரத்தை சரி செய்ய போலீசார் புதிய வழிமுறைகளை கொண்டு வந்தாலும் பொதுமக்கள் அதை கடைபிடிப்பதில்லை.
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் திருச்சி, சென்னை, பெங்களூரு, தஞ்சாவூர், நாகப்பட்டினம் பஸ்கள் நிறுத்த பகுதியில் அதிகளவில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இந்த வழியாகத்தான் பஸ் நிலையத்திற்கு வரும் அனைத்து பஸ்களும் வெளியே செல்ல வேண்டும்.
அந்த பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பஸ்கள் செல்வதற்கும், பஸ்களை திருப்பி நிறுத்துவதற்கும் டிரைவர்கள் சிரமப்படுகின்றனர். இதுதவிர இந்த இருசக்கர வாகனங்கள் நடந்து செல்லும் பயணிகளுக்கும், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளுக்கும் இடையூறாக உள்ளன.
பஸ்கள் உள்ளே வரும் பகுதியில் நெரிசலை தவிர்க்க போலீசார் இருசக்கர வாகனங்களை நிறுத்த கூடாது என அறிவிப்பு செய்துள்ளனர்.
இதை கண்டுகொள்ளாமல் பஸ் நிலையத்திற்கு இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அறிவிப்பு பலகை அருகிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு பஸ் நிலையத்திற்குள் செல்கின்றனர்.
இதனால் தினந்தோறும் அந்த பகுதியில் பஸ்களை நிறுத்த முடியாமல் டிரைவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.ஏற்கனவே நெரிசலாக உள்ள பகுதியில் தொடர்ந்து வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளை உணர்ந்து பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை வெளியிடங்களில் நிறுத்த வேண்டும்.
போலீசார் கண்டு கொள்ளாமல் இருப்பதால் பொதுமக்களும் வாகனங்களை பஸ் நிலையத்தில் இஷ்டம் போல் நிறுத்துகின்றனர். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.