அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சேர மத்திய மந்திரி அறிவுறுத்தல்
- மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சேரும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்கள் செயல்பட வேண்டும் என மத்திய மந்திரி அறிவுறுத்தினார்.
- வேளாண்மை துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை மந்திரி ஜான் பெர்லா தலைமையில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் முன்னிலையில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வீடுகள் குறித்தும், பண்ணை குட்டை அமைத்தல், புதிய குளங்கள் அமைத்தல் போன்ற திட்ட பணிகள் குறித்து மத்திய மந்திரி கேட்டறிந்தார்.
கிராமப் பகுதிகளில் ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான பணிகளை அதிகளவு மேற்கொள்ள திட்டமிட வேண்டும் என அலுவலர்களிடம் தெரிவித்தார். வேளாண்மை துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
விவசாயிகளின் தேவைக்கேற்ப திட்டங்களை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார். மத்திய மந்திரி பேசுகையில், மாணவர்களின் கல்விக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உயர் கல்வி படிக்கின்ற மாணவர்கள் வெளிநாட்டில் படிப்பவர்கள் மற்றும் பிற மாநிலங்களில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உரிய காலத்திற்குள் கல்வி உதவித்தொகை மற்றும் கல்விக் கடன்களை காலதாமதம் இன்றி கிடைக்க அலுவலர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
கல்வியின் வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி வேண்டு மானாலும் மத்திய அரசு வழங்க தயாராக உள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்று சேர்ந்திடும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சேக் மன்சூர், கோட்டாட்சியர்(பொறுப்பு) மரகதநாதன், பரமக்குடி கோட்டாட்சியர் முருகன் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.