மத்திய அரசின் நூற்பாலைக்கு மின்கம்பங்கள் நட கிராம மக்கள் எதிர்ப்பு
- மத்திய அரசின் நூற்பாலைக்கு மின்கம்பங்கள் நட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- மின்வாரிய அதிகாரிகள் தேர்வு செய்த இடத்தில் குடிநீர் குழாய்கள் செல்வதாலும், சாலை குறுகலாக இருப்பதாலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடியில் மத்திய அரசின் நூற்பாலை இயங்கி வருகிறது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக ஆலை செயல்படவில்லை. இதனால் உயர் மின்னழுத்த சப்ளைக்கு பதிலாக குறைந்த மின்னழுத்த சப்ளைகோரி ஆலை சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து மின் விநியோகம் வழங்குவதற்கு கமுதக்குடி கிராமத்தில் மின்கம்பங்கள் நடுவதற்கு மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் வந்தனர். மின்வாரிய அதிகாரிகள் தேர்வு செய்த இடத்தில் குடிநீர் குழாய்கள் செல்வதாலும், சாலை குறுகலாக இருப்பதாலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். எனவே மின்கம்பங்கள் நடுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து 50-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்பு அதிகளவில் இருந்ததால் தற்காலிகமாக பணிகளை நிறுத்தி விட்டு மின்வாரிய அதிகாரிகள் திரும்பி சென்றனர்.