பிஎச்.டி. மாணவர் சேர்க்கை- இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்
- முனைவர், இளம்முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கையில், யு.ஜி.சி அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகையே வழங்கப்படுவதில்லை.
- இளம் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கும்படி அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
முனைவர், இளம் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வில் எடுக்க வேண்டிய தகுதி மதிப்பெண்களில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத சலுகை வழங்குவதற்காக தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் இயற்கைக்கு முரணாகவும், சமூகநீதிக்கும் எதிராகவும் அமைந்திருக்கின்றன.
இட ஒதுக்கீட்டுக்கான விதிகளை மாநிலங்களின் நடைமுறைக்கு ஏற்றவாறு செயல்படுத்த வேண்டும் என்பதைக் கூட அறியாமல் பல்கலைக்கழகம் கட்டுப்பாடு விதிப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசுக்கு சொந்தமான விளையாட்டு பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண் சலுகை பெற ஓ.பி.சி சான்றிதழ் கோரப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. ஓபிசிக்கு இணையான பி.சி, பி.சி (முஸ்லீம்), எம்.பி.சி, சீர்மரபினர் ஆகிய பிரிவினருக்கான சாதிச் சான்றிதழை தாக்கல் செய்வோருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க பல்லைக்கழக நிர்வாகத்திற்கு அரசு ஆணையிட வேண்டும்.
தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தின் நிலை இப்படி என்றால், தமிழ்நாட்டில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான பிற பல்கலைக்கழகங்களில் பெரும்பாலானவற்றில், முனைவர், இளம்முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கையில், யு.ஜி.சி அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகையே வழங்கப்படுவதில்லை. இது சமூகநீதியை முற்றிலும் மறுப்பதாகும். இந்த நிலையை மாற்றி முனைவர், இளம் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கும்படி அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.