ராமேஸ்வரம் கோவில் பிரசாதம் தபால் வழியாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் திட்டம் அமல்
- வீடுகளுக்கே கோவில் பிரசாதம் அனுப்பி வைக்கும் திட்டத்தை, இந்து சமய அறநிலையத் துறை செயல்படுத்தி வருகிறது.
- 49 பிரசித்தி பெற்ற கோவில்களின் பிரசாதத்தை, தபால் வழியாக பக்தர்களுக்கு அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர்,ஜூன்.29-
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு, நேரில் சென்று சுவாமியை தரிசிக்க முடியாத பக்தர்கள் வசதிக்காக, அவர்கள் வீடுகளுக்கே கோவில் பிரசாதம் அனுப்பி வைக்கும் திட்டத்தை, இந்து சமய அறநிலையத் துறை செயல்படுத்தி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள புகழ் பெற்ற ராமநாத சுவாமி கோவிலும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. கோவிலில் கோடி தீர்த்தம், 100 மி.லி., செம்பில் அடைத்தும், 50 கிராம் கற்கண்டு, ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாள் படம், விபூதி, குங்குமம் அடங்கிய பிரசாதம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
தபால் செலவு தவிர்த்து, இதற்கு கட்டணம், 145 ரூபாய். பிரசாதம் வேண்டுவோர் www.hrce.tn.gov.inஎன்ற இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.இந்து சமய அறநிலையத் துறை - தபால் துறை இணைந்து ஏற்கனவே, 49 பிரசித்தி பெற்ற கோவில்களின் பிரசாதத்தை, தபால் வழியாக பக்தர்களுக்கு அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.