நவ்லாக் ஊராட்சியில் ரூ.11 கோடியில் திட்டபணிகள்
- மகளிர்களுக்கு உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது
- அமைச்சர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த நவ்லாக் ஊராட்சியில் உள்ள சிப்காட், வ.உ.சி நகர், திருவள்ளுவர் நகர், புளியங்கண்ணு ஆகிய இடங்களில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி, மாவட்ட ஊராட்சி நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,ஒன்றிய பொது நிதி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகிய நிதிகளிலிருந்து மொத்தம் ரூ.97 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் 7 வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.
இதன்படி கட்டி முடிக்கப்பட்டுள்ள நியாய விலைக் கடை கட்டிடங்கள், பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், காரிய மேடை, அங்கன்வாடி மைய கட்டிடம், நெற்களம், நாடக மேடை ஆகியவற்றிற்கான திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.
விழா நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதல்அமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்று கிட்டத்தட்ட இரண்டே கால் ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் புதுமையான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்கும் பொழுதெல்லாம் மக்களை கேட்காமலேயே மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவார்.
அதே வழியில் நமது முதல் அமைச்சரும் மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன், புதுமைப் பெண், காலை உணவு, இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதால் மகளிர்கள், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயனடைந்து வருகின்றனர்.
செப்டம்பர் முதல் மகளிர்களுக்கு உரிமைத் தொகை மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்த நவ்லாக் ஊராட்சியில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் ரூ.11 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பொதுமக்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு பயன்பெற வேண்டும் .
இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.
இதில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி,ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ரமணன், துணைத் தலைவர் இராதாகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் செல்வம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பக்தவச்சலம், கோமதி விஜயகுமார், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தியாகராஜன், வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தரம், நவ்லாக் ஊராட்சி மன்றத் தலைவர் சரஸ்வதி குமார், நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமன், சிவப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.