சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது
- போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
- சிறப்பு சோதனைகளில் ஈடுபட்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமையில், 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 16 இன்ஸ்பெக்டர்கள், 64 சப் -இன்ஸ்பெக்டர்கள் உள்பட 547 போலீசார் அடங்கிய குழுவினர் கடந்த 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை சிறப்பு சோதனைகளில் ஈடுபட்டனர்.
இதில் 4 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 7 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.37 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் சூதாடிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்ந்து அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து ஜெயிலில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.