படவேட்டம்மன் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்த பக்தர்கள் எதிர்ப்பு
- கோவில் உண்டியலுக்கு சீல் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்
- அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்கு வாதம்
ராணிப்பேட்டை:
வாலாஜாவில், சோளிங்கர் சாலையில் பழமை வாய்ந்த படவேட்டம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாலாஜா. மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று இந்து சமய அறநிலை யத்துறை ஆய்வாளர் அமுதா தலைமையில் கோவிலுக்கு வந்த அதிகாரிகள் கோவில் உண்டியலுக்கு சீல் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.தொடர்ந்து கோவிலை கையகப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கினர்.
இது பற்றி தகவல் அறிந்த கோவில் நிர்வாகத்தினர்,பல்வேறு அரசியல் கட்சியினர், இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பக்தர்கள் அதிகாரிகளிடம் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜா போலீசார் பக்தர்களை சமாதானப்படுத்தினர்.
பக்தர்கள் சிலர் கோவிலில் உண்டியல் இருப்பது தான் பிரச்சனை என்றால் அதனை அகற்றி விடுகிறோம் என கூறி சிமெண்டால் கட்டப்பட்டிருந்த உண்டியல் மேடையை இடித்து அகற்றினர்.
கோவிலை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என கோவில் முன்பாக பக்தர்கள் கோஷமிட்டதாலும், பக்தர்கள் கூட்டமும் அதிகரிக்கவே அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.
தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க கோவில் அருகில் போலீசார் குவிக்கப்பட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.