வாலிபர் கொலையில் சென்னை கும்பல் குறித்து விசாரணை
- போலீசார் விரைந்தனர்
- 4 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்
அரக்கோணம்:
சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் பிராங்கிளின் (வயது 25). இவரது பெரியம்மா வீடு அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே உள்ள ஏ.வி.எம். சர்ச் பகுதியில் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிராங்கிளின் அவரது பெரியம்மா வீட்டுக்கு வந்திருந்தார். அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பழைய 8-வது பிளாட்பாரம் உள்ளது.
செங்கல்பட்டு வழியாக செல்லும் ரெயில்கள் நிற்கும் இந்த பிளாட்பாரம் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது.
இந்த பிளாட்பாரத்தின் அருகே நேற்று இரவு பிராங்கிளின் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பிராங்கிளினை திடீரென சரமாரியாக வெட்டினர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார்.
கும்பல் ஓட ஓட விரட்டி கத்தியால் சரமாரியாக வெட்டினர். உடலில் பலத்த காயம் ஏற்பட்டதால் பிராங்கிளின் சரிந்து விழுந்தார். ஆஸ்பத்தரியில் சேர்க்கபட்ட அவர் இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி, அரக்கோணம் ஏ.எஸ்.பி. அசோக் கிரீஸ் யாதவ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் பாரதி, விநாயகமூர்த்தி, பார்த்தசாரதி, சப்-இன்ஸ் பெக்டர் நாராயணசாமி ஆகியோர் தலைமையில் 4 தனிப்படை அமைத்து எஸ்.பி. உத்தரவிட்டார்.
இதையடுத்து, தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதி, ரெயில் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட் சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் பல்வேறு முக்கிய தடையங்கள் கிடைத்து ள்ளது. குற்றவாளிகள் அங்க அடையாளங்கள் மற்றும் அவர்கள் வந்த பாதையின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
பிராங்கிளினுக்கும் சென்னையை சேர்ந்த சில பேருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவர் தனது பெரியம்மா வீட்டில் தங்கி இருந்தார்.
இதனை நோட்டமிட்ட சென்னை கும்பல் திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பிராங்கிளின் எதிரிகள் குறித்த விவரங்களை சேகரிக்க தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.
குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.