கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள்
- கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்
- ராணிப்பேட்டை மாவட்டத்தில் சராசரியை விட கூடுதலாக மழை பெய்துள்ளது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை 967 மில்லி மீட்டர் ஆகும். இந்த ஆண்டு இதுவரை 1,159.71 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவத்தில் சராசரி மழை அளவான 373.8 மில்லி மீட்டருக்கு இந்த ஆண்டு 402.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாண்டஸ் புயலின் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 122.8 மி.மீ. மழை பெய்துள்ளது.
இதனால் இந்த பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல் 1912ஹெக் டேர், திலக்கடலை 170.1 ஹெக் டேர், பயறுவகை பயிர்கள் 76 ஹெக்டேர் நீரில் முழ்கியுள்ளன. பெரும்பாலான பயிர்கள் வளர்ச்சி பருவத்தில் உள்ளன.
நீரில் முழ்கியுள்ள பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் கீழ்கண்ட நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறார்கள். தாழ்வான நிலங்களில் மழைநீர் வெளியேர ஏதுவாக வடிகால் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மேலுரமாக தழை சத்து மற்றும் சாம்பல் சத்து உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட 25 சதவீதம் கூடுதலாக இட வேண்டும்.தழை சத்து மற்றும் நுண்ணூட்டசத்து குறைபாடு காணப்பட்டால் இலை வழியாக தெளிக்கப்பட வேண்டும். பூச்சிகள் மற்றும் நோய்களின் தாக்கத்தை கூர்ந்து கண்காணித்தல் வேண்டும்.
நெல் பயிரிடப்பட்ட வயலில் உள்ள கூடுதல் நீரை வடிகட்ட வேண்டும். நெற்பயிர் துரிதமாக வளர்ச்சி அடைந்திட ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் டிஏபி மற்றும் 10 கிராம் பொட்டாசியம் குளோரைடை இலைவழியாக தெளிக்கலாம். தொடர்ந்து ஒரு வார கால இடைவெளியில், ஒருலிட்டர் தண்ணீரில் 3 கிராம் போரிக் அமிலம் மற்றும் 5 கிராம் ஜிங்க் சல்பேட், 5 கிராம் பெரஸ்சல்றார்கள்.
பேட், மற்றும் 10 கிராம் யூரியா என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் கரைசல் தயாரித்து இலைவழியாக தெளிக்க வேண்டும். மழைநீர் தேங்கியுள்ள வயல்களில் நீரை வடித்த பின்பு மேலுரமாக ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு இரவு முழுவதும் வைத்திருந்து மறு நாள் தெளிக்கும் போது அதனுடன் பொட்டாஷ் 17கிலோ கலந்து மேலுரமாக இட வேண்டும். ஒருவாரம் கழித்து இலைவழி உரமாக ஏக்கருக்கு யூரியா 2 கிலோ, துத்தநாக சல்பேட் ஒரு கிலோவை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும்.
தூர் கட்டும் தருணத்தில் ஊட்டச்சத்து" பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய உடனடியாக தழைச்சத்து கிடைப்பதற்கு ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு அம்மோனியம் சல்பேட் 50 கிலோ அல்லது ஏக்கருக்கு அம்மோனியம் குளாரைடு 42 கிலோ என்ற அளவில் மேலுரமாகவும், பூக்கும் பருவத்தில் உள்ள நெற்பயிர்களை பாதுகாக்க ஏக்கர் ஒன்றுக்கு டிஏபி 4 கிலோவை 10 லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் தெளிந்த நீரை வடிகட்டி இந்த கரைசலுடன் பொட்டாஷ் உரம் 2 கிலோ சேர்த்து 190 லிட்டர் தண்ணீரில் கலந்து இலைவழி உரமாக தெளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். துத்தநாக சத்து பற்றாக் குறை உள்ள நெல் வயல்களில் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன், 1 கிலோ சிங்க் சல்பேட்டை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏக்கருக்கு 1 கிலோ சூடோமோனாஸை 20 கிலோ மணல் அல்லது தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும். மேற்கண்ட தொழில்நுட்பங்களை விவசாயிகள் பின்பற்றி மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை பாதுகாத்து அதிக மகசூல் பெற வேண்டும்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.