வாலாஜா - அணைக்கட்டு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- வியாபாரிகள் வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது
- போலீசார் சமாதானம் செய்தனர்
ராணிப்பேட்டை:
வாலாஜா நகரில் உள்ள அணைக்கட்டு சாலை மிகவும் குறுகி காணப்படுகிறது. போக்குவரத்து நெரிசலால் பாதசாரிகள் மற்றும் வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதி படுகின்றனர்.
எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வாலாஜா நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
அதன்படி சோளிங்கர் சாலை, பஸ் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த வாரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
இதை தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் சார்பில் நேற்று வாலாஜா- அணைக்கட்டு சாலையில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கடைகள், வீடுகளின் ஆக்கிரமிப்பு மேற்கூரைகள், விளம்பர போர்டுகள் மற்றும் கட்டுமானங்கள் ஆகியவை இடித்து அகற்றப்பட்டன.
வாலாஜா நகராட்சி ஊழியர்களும் இந்த பணியில் ஈடுபட்டனர்.ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியினை நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கிருந்த வியாபாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.