மழைநீர் கலந்த கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
- ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
- போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட மேலபுலம் கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் உள்ள நடுத்தெரு, பெரிய தெரு, வண்ணாரப்பேட்டை தெரு ஆகிய பகுதிகளில் மழைநீர் தெருக்களில் தேங்குவதை தவிர்க்க மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்யும் தொடர்மழையின் காரணமாக, மழை நீருடன் கலந்த கழிவுநீர் கால்வாயில் தேங்கி துர்நாற்றத்தை வீசுகிறது.
அதனால் கொசு உற்பத்தி அதிகமாகி நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. சுகாதார சீர்கடி ஏற்படுத்தும் வகையில் கால்வாயில் தேங்கிய நீரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை. இதனால் ஆத்திர மடைந்த பொதுமக்கள் திரண்டு சென்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை யிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் அனிதா நாராயணன்,பொறியாளர் ராஜேஷ், கிராம நிர்வாக அலுவலர் கொய்யாமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் அதிகாரிகளை சூழ்ந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.