காமராஜர் தங்கியிருந்த கட்டிடத்தை நினைவு சின்னமாக்க வேண்டும்
- 11 முதல் 17-ந்தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியேற்ற வேண்டும்
- நகர சபை கூட்டத்தில் தீர்மானம்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை நகர மன்ற சாதாரணக் கூட்டம் நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத் தலைமையில் நேற்று நடைபெற்றது.துணைத்தலைவர் ரமேஷ் கர்ணா நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வார்டு எண் 23 வண்டி மேட்டு சாலையில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார மைய கட்டிடம் மேம்படுத்துதல் பணி செய்ய ரூ 40 லட்சம், 30 வார்டுகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் முன் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தினக்கூலியாக ஆறு மாத கால ஊதியம் வழங்க ரூ.18 லட்சம் ஒதுக்குவது.
மேலும் நகராட்சி வளாகத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் தங்கியிருந்த கட்டிடத்தை பழுது பார்த்து நினைவுச் சின்னம் ஆக்க வேண்டும். சுதந்திரப் போராட்ட தியாகி கல்யாணராமன் அவர்களை கௌரவிக்கும் வகையில் எம் எஃப் சாலைக்கு தியாகி கல்யாணராமன் சாலை என பெயர் சூட்டுவது. என்பது உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் பேசியதாவது:-
ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடுகிறோம்.
இதனால் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை நகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என அரசாணை வந்துள்ளது. நமது நகரில் 12,502 வீடுகள் உள்ளது. அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியேற்ற வேண்டும். கொடி ரெடியாகிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.