பாணாவரம் பூங்காவில் உடற்பயிற்சி கூடம் பயன்பாட்டுக்கு வருமா?
- இளைஞர்கள் எதிர்பார்ப்பு
- சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் ஒட்டியுள்ள பகுதியில் ரூ.30-லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டது. பல மாதங்களுக்கு முன்பு வரை அம்மா பூங்கா மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன்பின் பூங்கா தற்போது பராமரிப்பின்றி உள்ளது.
இதில் மின் கம்பங்கள், சிமெண்டு கான்கிரீட், பேவா் பிளாக், பொதுமக்கள் மக்கள் அமரும் இருக்கை, கூழாங்கல்லால் 8 வடிவிலான நடைப்பாதை, குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் என அனைத்தும் பராமரிப்பின்றி துருப்பிடித்து உடைந்த நிலையில் உள்ளது. செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்ததால் பூங்கா புதர் மண்டி காட்சியளிக்கிறது.இதேப்போல் பூங்காவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.
அதில் உள்ள நவீன கருவிகள் எல்லாம் இதுவரை பயன்படுத்தவில்லை. இந்தஉடற்பயிற்சி கூடம் இதுவரை திறக்கப்படாமல் இளைஞா்களின் பயன்பாட்டிற்கு விடாமல் பூட்டியே கிடக்கிறது.
உடற்பயிற்சி கருவிகள் துருப்பிடித்து நிலையில் உள்ளதாக இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
மேலும் இங்கு உடைந்த குப்பைகள் அள்ளுவதற்காக பயன்படுத்தும் வண்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிக்குயில் அதிகாரிகள் பலமுறை ஆய்வுக்கு வந்தும் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை.
இதனால் அந்த பூங்கா மற்றும் உடற்பயிற்சிகூடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
இது குறித்து அந்த பகுதி மக்களும், இளைஞர்களும் கூறியதாவது:-
இந்த பூங்கா மிகவும் எங்கள் பகுதி மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக உள்ளது. இந்த பூங்கா சரியான பராமரிப்பு இல்லாததால் கடந்த 3 ஆண்டுகளாக செடி கொடிகள் வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது.
சிறுவர்கள் விளையாடு வதற்காக அமைக்கப்பட்ட ஊஞ்சல், சறுக்குதல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களும் உடைந்து காணப்படுகிறது.
மேலும் பூங்காவுக்கு வருபவர்களின் அவசர தேவைக்காக கழிவறை, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அதிக அளவில் நடமாடுவதால் பூங்காவுக்குள் சென்று வர அணைவரும் அச்சப்படுகின்றனர்.
எனவே பழுதடைந்து கிடக்கும் பூங்காவை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக பராமரித்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.