சிறுவர்கள் இல்லத்தில் யோகா பயிற்சி
- மனநல ஆலோசர்களை பணியமர்த்த வேண்டும்
- குழந்தைகளின் மனநிலை மாற வேண்டும்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திலிருந்து கடந்த மாதத்தில் 4 சிறுவர்கள் இல்லத்தை விட்டு வெளியேறி சென்றனர். பின்னர் அவர்களை போலீசார் மீட்டு மீண்டும் இல்லத்தில் ஒப்படைத்தனர்.
இதை தொடர்ந்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர்.ஆர்.ஜி.ஆனந்த் , ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமையில் நேற்று அரசினர் குழந்தைகள் இல்லத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர்.ஆர்.ஜி.ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
அந்த வகையில் ராணிப்பேட்டையில் கடந்த மாதம் 4 சிறுவர்கள் சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச்சென்றதை தொடர்ந்து உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மீண்டும் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் மன அழுத்தம் முக்கிய காரணமாக உள்ளது.
குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் பயிற்றுநர்கள் மையத்தில் 3 நபர்கள் உள்ளனர். குழந்தைகள் இல்லத்தில் கூடுதல் மனநல ஆலோசர்களை பணியமர்த்த வேண்டும், குழந்தைகளின் மனநலத்தை சீரமைக்க யோகா பயிற்சிகள், விளையாட்டு பயிற்சிகள், திறனை வெளிக்கொண்டுவரும் பயிற்சிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற மாவட்டங்களுக்கு எடுத்துக்காட்டாக குழந்தைகள் யாரும் தப்பி போகாமல் மையங்களிலே சிறந்த முறையில் வளர நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
குழந்தைகள் இல்லம், கூர்நோக்கு இல்லங்கள். நல்வழிப்படுத்தும் இல்லங்களாக மாற்றிட குழந்தைகளின் மனநிலை மாற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசியா, குழந்தைகள் நல குழும தலைவர் வேதநாயகம் உள்பட பலர் உடனிருந்தனர்.