சிறுமியை கடத்தி பலாத்காரம்: வேன் டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
- நம்பி அந்த சிறுமி வீட்டில் இருந்த சில நகைகளை எடுத்து சென்று லெனினிடம் கொடுத்தார்.
- சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் லெனினுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் லெனின் (வயது 23). பால் வேன் டிரைவர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுதொடர்பான புகாரின் பேரில் மகேந்திரமங்கலம் போலீசார் போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் லெனின் மற்றொரு 16 வயது சிறுமியுடன் நண்பர் போல் பழகினார். கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்த சிறுமியிடம் வீட்டில் உள்ள நகைகளை எடுத்து வருமாறு கூறினார். இதை நம்பி அந்த சிறுமி வீட்டில் இருந்த சில நகைகளை எடுத்து சென்று லெனினிடம் கொடுத்தார்.
இந்த நிலையில் சிறுமியை கடத்தி சென்ற லெனின் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுபற்றி சிறுமி கேட்டபோது சிறுமியின் தந்தையை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.
இதுதொடர்பான புகாரின் பேரில் தருமபுரி அனைத்து மகளிர் போலீசார், கடத்தல், கொலை மிரட்டல், மோசடி, பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் லெனின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த 2 வழக்குகளும் தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தன.
விசாரணையின் முடிவில் லெனின் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் லெனினுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து தருமபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு நீதிபதி சையத் பர்கத்துல்லா தீர்ப்பளித்தார்.
இதேபோல் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் லெனினுக்கு கடத்தல் குற்றத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், மோசடி குற்றத்திற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், பாலியல் தொந்தரவு குற்றத்திற்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், மொத்தம் ரூ.42 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இந்த தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த வழக்குகளில் அரசு தரப்பில் வக்கீல் கல்பனா ஆஜராகி வாதாடினார். இதைத் தொடர்ந்து லெனினை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.