காலையில் கோரிக்கை மனுவை பெற்று மாலையில் நல உதவிகளை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
- கள ஆய்வில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் 2 நாள் பயணமாக நேற்று சேலம் வந்தார்.
- அப்போது பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
சேலம்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் 2 நாள் பயணமாக நேற்று சேலம் வந்தார். காமலாபுரம் விமான நிலையத்திற்கு விமானத்தில் வந்த அவர், திடீரென ஓமலூர் தாலுகா அலுவலகத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அந்த கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்த முதல்-அமைச்சர் உடனடியாக அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, கொல்லப்பட்டியை சேர்ந்த ராஜம்மாள் என்பவருக்கு இலவச வீட்டு மனை பட்டாவை நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த முரளிதரன் என்பவருக்கு கிராம நத்தம் கூட்டுப்பட்டாவிலிருந்து பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.
இதேபோல் தீண்டமங்கலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கோமதி என்பவருக்கு தையல் எந்திரம், செல்லப்பிள்ளை குட்டையை சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட சித்ரா என்பவருக்கு உதவி தொகைக்கான ஆணையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் எதிர்பார்க்காத வகையில் முதல்-அமைச்சர் வந்தார். அவரிடம் மனுக்களை கொடுத்தோம். காலையில் மனுக்களை பெற்றுவிட்டு மாலையில் தொடர்பு கொண்டு நலத்திட்ட உதவிகளை பெற வருமாறு அழைத்தனர். இதனை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. முதல்-அமைச்சர் நலத்திட்டத்தையும் வழங்கினார். இது எங்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது என தெரிவித்தனர்.