உள்ளூர் செய்திகள்

உடைப்பு ஏற்பட்ட பகுதியில் பொறியாளர்கள் கார்த்திகேயன், உமாதேவி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

ஆலங்குளம் அருகே உடைப்பு ஏற்பட்ட ஊரணி கரையில் சீரமைப்பு பணி

Published On 2023-11-25 08:31 GMT   |   Update On 2023-11-25 08:31 GMT
  • குற்றாலத்தில் இருந்து வரும் சிற்றாறு நீரானது மாயமான்குறிச்சி வழியாக மாறாந்தை குளத்திற்கு செல்கிறது.
  • மாயமான்குறிச்சியில் ஒரு மடை அமைக்கப்பட்டு அதன் மூலம் பணிக்கர் ஊரணிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு நிரப்பப்படுகிறது.

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள மாயமான்குறிச்சி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.14.39 லட்சத்தில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஊரணி அமைக்கப்பட்டது. குற்றாலத்தில் இருந்து வரும் சிற்றாறு நீரானது மகிழ்வண்ணநாதபுரம் அருகே உள்ள நாகல்குளம் வந்தடைந்து அங்கிருந்து மானூர் கால்வாய் மூலம் தண்ணீர் பல கிராமங்களை கடந்து மாயமான்குறிச்சி வழியாக மாறாந்தை குளத்திற்கு செல்கிறது. இந்த மாறாந்தை கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர் மாயமான்குறிச்சியில் ஒரு மடை அமைக்கப்பட்டு அதன் மூலம் சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பணிக்கர் ஊரணிக்கு கொண்டு வரப்பட்டு நிரப்பபடுகிறது.

இந்த ஊரணியில் தண்ணீர் தேக்குவதால் அருகில் உள்ள சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் விடிய, விடிய பெய்த மழையால் இந்த ஊரணிக்கு மாறாந்தை கால்வாய் மடையில் இருந்து தண்ணீர் அதிகளவில் வந்துள்ளது. இதனால் ஊரணி கரையின் வடபுறம் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. ஊரணி சுற்றி கட்டப்பட்ட கரையின் சுவர் தரமில்லாததால் உடைப்பு பெரியளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தண்ணீர் அருகில் உள்ள மானூர் கால்வாய் வழியே வீணாக வெளியேறியது. இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மாறாந்தை கால்வாய் மடை அடைக்கப்பட்டு உடைந்த ஊரணி கரையை சரி செய்யும் பணி தொடங்கி உள்ளது.ரூ.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊரணி கரை தரமில்லாமல் 2 மாதத்தில் உடைந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தரமில்லாமல் ஊரணி கட்டியவர்கள் மீதும் அதற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டி அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊரணிக்கு இருபுறமும் கால்வாய் செல்வதால் கரை உடைப்பால் நடவுக்காக பயிரப்பட்ட நெல் நாற்றுகள் சேதம் ஆகி உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

Tags:    

Similar News